ஆங் சாங் சூகி, முக்கிய தலைவர்கள் சிறைப்பிடிப்பு மியான்மரில் ராணுவ புரட்சி

நேபியேட்டோ: மியான்மரில் அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது. ஆங் சாங் சூகி உட்பட முக்கிய தலைவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். ஆட்சியை ராணுவம்  கைப்பற்றியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கள் வெளியாகி இருக்கின்றது.  மியான்மரில் கடந்த 1962ம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடந்து வந்தது. இதனை எதிர்த்து தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஆங் சாங் சூகி போராடினார். இதன்  காரணமாக அவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டு சிறையில் வைக்கப்பட்டார். மக்களின் தொடர் போராட்டம் காரணமாக கடந்த 2015ம் ஆண்டு மியான்மரில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆங் சாங் சூகியின் தேசிய  ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. வெளிநாட்டு குடியுரிமை பெற்றதன் காரணமாக அவரால் அதிபராக பதவியேற்க முடியவில்லை. இதனை தொடர்ந்து அவருக்கு நெருக்கமான டின் கியாவ் (71) அதிபராக பதவியேற்றார். அரசின் தலைமை  ஆலோசகராக ஆங் சாங் சூகி பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல்களுக்கு இடையே கடந்த நவம்பரில் அங்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. ஆங் சாங் சூகி தலைமையில் தேசிய ஜனநாயக கட்சி உட்பட பல கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன .  இதேபோல், ராணுவத்தின் ஆதரவு பெற்ற கட்சிகளும் தேர்தலில் போட்டியிட்டன. ஆட்சி அமைப்பதற்கு 322 இடங்கள் தேவை என்ற நிலையில் மொத்தமுள்ள 476 இடங்களில் 396 இடங்களை தேசிய ஜனயாக கட்சி கைப்பற்றியது. ஆனால்,  ராணுவத்தின் ஆதரவு கட்சிகள் 25 சதவீதம் இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றன. இதனை தொடர்ந்து தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி தேர்தல் முடிவுகளை ஏற்பதற்கு ராணுவம் மறுத்து விட்டது. ஆனால், இந்த குற்றச்சாட்டை  தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இந்நிலையில், திடீரென நேற்று ஆட்சி கவிழ்க்கப்பட்டு மியான்மர் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசு ஆலோசகர் ஆங் சாங் சூகி கைது செய்யப்பட்டு வீட்டு சிறையில்  வைக்கப்பட்டுள்ளார். அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய தலைவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு ஆண்டுக்கு மியான்மர் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று ராணுவத்துக்கு சொந்தமான ஊடகத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. தலைநகரில் போன் மற்றும் இணையதள சேவை முழுவதுமாக  முடக்கப்பட்டுள்ளது. ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயக கட்சியை தொடர்பு கொள்ள முடியவில்லை. ராணுவத்தின் பிடியில் மியான்மர் கொண்டு வரப்பட்டுள்ளது குறித்து ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள்  மிகுந்த கவலை தெரிவித்துள்ளன.

வேதனையுடன் கவனிக்கிறோம் இந்தியா கவலை

மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “மியான்மரில் ஏற்பட்டுள்ள நிலையை மிகுந்த வேதனையோடு கவனித்து வருகிறோம். ஜனநாயக மாற்றத்திற்கான செயல்முறைக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக  இருந்துள்ளது. சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக நடைமுறை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என நம்புகிறோம்” என குறிப்பிட்டுள்ளது.

ஐநா கவலை

ஐநா பொது செயலாளர் ஆன்டனியோ கட்டாரஸ், “மியான்மரில் ஆட்சி கவிழ்ப்பு என்பது ஜனநாயக சீர்திருத்தங்கள் மீதான பலத்த அடி,” என விமர்சித்துள்ளார்.

மர்ம பதிவு

ஆங் சாங் சூகியின் பேஸ்புக் பக்கத்தில், ராணுவத்தின் சதி மற்றும் சர்வாதிகாரம் திரும்புவதற்கு மியான்மர் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என குறிப்பிட்டு செய்தி பதிவிடப்பட்டுள்ளது. இதனை யார் பதிவிட்டனர் என்பது தெரியவில்லை.

Related Stories: