பேரறிவாளன் விடுதலை விவகாரம்: உச்சநீதிமன்ற கெடு முடிந்தும் முடிவெடுக்காதது அநீதி: கவர்னருக்கு ராமதாஸ் கண்டனம்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பேரறிவாளன் தரப்பின் கோரிக்கைப்படி, இவ்வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்த உச்ச நீதிமன்றம், ஒரு வாரத்திற்குள் கவர்னர் முடிவெடுக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் அளித்த வாக்குறுதியின்படி கடந்த 25ம் தேதிக்குள் பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

உச்ச நீதிமன்ற ஆணைப்படி முடிவெடுப்பதாக இருந்தாலும் கூட 28ம் தேதிக்குள் கவர்னர் தீர்மானித்திருக்க வேண்டும். ஆனால், கெடு முடிந்து 4 நாட்களாகியும் கூட எந்த நகர்வும் நடக்கவில்லை. அதற்கான காரணத்தையும் தெரிவிக்கவில்லை. இது மனித உரிமை மீறலாகும். இதில் இவ்வளவு தாமதம் தேவையில்லை. ஒரு மணி நேரத்தில் கவர்னர் எளிதாக முடிவெடுக்க இயலும். ஆனாலும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டு, ஒரு வாரம் கழித்து கெடு முடியும் நாளில், கவர்னரின் செயலாளர் டெல்லி சென்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரை சந்தித்து பேசியுள்ளார்.

இத்தனை நாட்களாக நடத்தாத எந்த சட்ட ஆலோசனையை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருடன் கவர்னரின் செயலர் நடத்தினார் என தெரியவில்லை. இனியும் தாமதிப்பது சரியல்ல. எனவே, பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், அவரையும், மற்ற 6 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தமிழக அமைச்சரவையின் பரிந்துரைக்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: