பாமகவின் இடஒதுக்கீடு கோரிக்கைக்கு எதிர்ப்பு பேரவை தேர்தலில் 3வது அணி உருவாகுமா? பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி

சென்னை: பாமகவின் இடஒதுக்கீடு கோரிக்கைக்கு தேமுதிக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் சட்டமன்ற தேர்தலில் 3வது அணி உருவாகுமா என்பதற்கு பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த்-பிரேமலதா தம்பதியினருக்கு நேற்று 31வது திருமண நாள். இதையடுத்து சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் விஜயகாந்த் புத்தாடை உடுத்தி தனது மனைவியுடன் மாலை அணிந்த நிலையில் குடும்ப புகைப்படம் எடுத்து கொண்டார். அப்போது விஜயகாந்த்தின் மைத்துனரும், தேமுதிக துணை பொது செயலாளருமான எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்த விஜயகாந்த்-பிரேமலதா ஆகியோருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பூங்கொத்து கொடுத்து திருமண வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். மேலும் அவர்களுடன் அமர்ந்து புகைப்படமும் எடுத்து கொண்டனர். தொடர்ந்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அளித்த பேட்டி: சசிகலா உடல் நலம் சரியாகி வந்ததற்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ஒரு பெண்ணாக ஒரு பெண்ணுக்கு எனது ஆதரவு உண்டு என்பது தான் எனது நிலைப்பாடு. இது அதிமுகவுக்கு எதிரான நிலையா? சசிகலாவுக்கு ஆதரவான நிலையா என்பதற்குள் நாம் போக தேவையே கிடையாது. முதலில் அவர்  வரட்டும். என்னவெல்லாம் இங்கே மாற்றம் ஏற்பட போகிறது. அதிமுகவுக்கு பாதிப்பா என்பதை நாங்களும் உங்களை போல பொறுத்திருந்து பார்க்கிறோம்.

இன்று வரை அதிமுக கூட்டணியில் தான் நாங்கள் இருக்கிறோம். கூட்டணி பேச்சு வார்த்தையை கால தாதமப்படுத்துவதால் யாருக்கும் எந்த பலனும் இல்லை. இன்னும் 2 மாதம் தான் தேர்தலுக்கு உள்ளது. எனவே, கால தாமதம் செய்யாமல் அதிமுக பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும். நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் எங்களுடைய கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம். அப்போது அவர்கள் கருத்துக்களை உரிமையோடு வெளிப்படையாக பதிய வைத்து இருக்கிறார்கள். பாமக இருக்கும் கூட்டணியில் இருக்கக்கூடாது என்றும் பேசியிருக்கிறார்கள். எல்லா கருத்துக்களையும் கேட்டோம். எங்களுடைய கருத்துக்களையும் அவர்களிடம் சொல்லியிருக்கிறொம். ஆனால் செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி விஜயகாந்த் அறிவிப்பது தான், இறுதி அறிவிப்பாக இருக்கும்.

ஒரு சாதி எங்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கிறது. இடஒதுக்கீடு கேட்கும் உரிமை எல்லா சாதிக்குமே இருக்கிறது. விஜயகாந்த்தை பொறுத்த வரைக்கும் சாதி, மதம் இனம் எல்லாவற்றிக்கும் அப்பாற்பட்டு நாம் அனைவரும் ஒரே இனம், ஒரே குலம் என்ற மிகப்பெரிய தத்துவத்தோடு நாங்கள் எங்கள் கட்சியை ஆரம்பித்தோம். அந்த வகையில் தான் நாங்கள் பயணித்து கொண்டிருக்கிறோம். எனவே, இடஒதுக்கீடு என்பது சக்சஸ் ஆகுமா? சக்சஸ் ஆகாதா? என்பதை உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறோம்.  

மாற்றங்கள் தமிழக அரசியல் வரலாற்றில் வரபோகிறது. 3வது அணி என்ற உங்கள் கேள்வி குறித்து இன்னும் சில நாட்களில் பதில் அளிக்கிறேன். இனிமேல் தான் கூட்டணியா. எத்தனை தொகுதிகள், வேட்பாளர் யார் என்று இனிமேல் தான் பேசப்படும். எங்கள் தொண்டர்கள் அத்தனை பேரும் இந்த முறை நீங்கள் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். நான் போட்டியிடுகிறேனா? இல்லையா? என்பது இந்த நிமிடம் வரை எனக்கு தெரியாது. தலைவர் ஆணையிட்டால், தொண்டர்கள் விரும்பினால், என் குரல் இந்த முறை சட்டப்பேரவையில் ஒலிக்கும் என்பதை உறுதியாக சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: