உழவன் மகன் என்று முதல்வர் நடிப்பதை விவசாயிகள் நம்பமாட்டார்கள்: வைகோ அறிக்கை

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: உயர்மின் கோபுர திட்டங்களால் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும், வட மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும், விவசாயிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.   கடந்த ஜனவரி 4ம் தேதி, பள்ளிபாளையத்தில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியை சந்தித்து திட்டப்பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தபோது, அதை ஏற்றுக்கொண்டு, உடனடியாக நிறுத்துகிறேன் என்று அறிவித்தார். ஆனால், தொடர்ந்து திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகள், அமைச்சர் அளித்த வாக்குறுதியை நினைவூட்டி, மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, திருப்பூர் மாவட்டம் படியூர், பெல்லம்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தயம் தொடர்ந்து காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தேர்தலுக்காக நான் உழவன் மகன் என எடப்பாடி நடிப்பதை விவசாயிகள் நம்ப மாட்டார்கள்.  எனவே, உயர் மின் கோபுரங்கள் பிரச்னையில், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: