தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் சூழலில் சசிகலாவிற்கு ஆதரவாக அதிகரிக்கும் போஸ்டர்கள்: கலக்கத்தில் அதிமுக தலைமை

சென்னை: சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் சூழலில் சசிகலாவிற்கு ஆதரவாக அதிமுக நிர்வாகிகள் போஸ்டர்கள் அடித்து பரப்புரை செய்து வருவதால் அதிமுக தலைமை கலக்கத்தில் ஆழ்ந்து போயுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். விடுதலை ஆவதற்கு சில தினங்கள் இருந்த நிலையில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதேபோல், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை காலம் முடிந்து கடந்த 27ம் தேதி சசிகலா விடுதலை ஆனார். உடல்நிலை தேறி வருவதால் அவர் விரைவில் தமிழகம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே சசிகலாவிற்கு ஆதரவாக அதிமுக நிர்வாகிகளின் போஸ்டர் ஒட்டும் படலம் தொடங்கியுள்ளது. சசிகலா சிறைக்கு சென்ற பிறகு டிடிவி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து பல அதிமுக நிர்வாகிகள் வந்தனர். ஆனால், அவர்கள் மீண்டும் அதிமுகவிற்கே சென்றுவிட்டனர். தற்போது சசிகலா சென்னை வர உள்ள நிலையில் அதிமுகவினர் அவருக்கு ஆதரவாக போஸ்டர் அடித்து ஆதரவு தெரிவித்து வருவது அதிமுக தலைமைக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் சசிகலாவிற்கு ஆதரவாக அதிமுக நிர்வாகிகள் போஸ்டர் அடித்து வருகின்றனர். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் பிரசாரங்களில் கவனம் செலுத்தாமல் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து வருவது உட்கட்சியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், மாவட்டச் செயலாளர்கள் தங்கள் மாவட்டங்களில் சசிகலாவிற்கு ஆதரவாக போஸ்டர் அடிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. உத்தரவை மீறி போஸ்டர் அடிக்கும் நிர்வாகிகள் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அதிமுக தலைமை தயாராகி வருவதாகவும் தெரிகிறது. ஆனால், பல  மாவட்டங்களில் கட்சி தலைமையின் இந்த உத்தரவை கிடப்பில் போட்டு மாவட்ட செயலாளர்கள் சசிகலாவிற்கு ஆதரவாக போஸ்டர் அடிக்க தயாராகி வருவதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனவே, சசிகலாவின் வருகை அதிமுகவில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும், பல முக்கிய நிர்வாகிகள் சசிகலாவை நேரடியாக சென்று சந்திக்க தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: