புதுவை முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பாஜவில் இணைந்தார்

புதுடெல்லி: புதுவை மாநிலக் காங்கிரஸ் தலைவராக இருந்த நமச்சிவாயம் தலைமையில் 2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை காங்கிரஸ் சந்தித்து வெற்றி பெற்றது. இதனால் அவருக்கு, காங்கிரஸ் தலைமை முதல்வர் பதவியை வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமியை எம்எல்ஏக்கள் ஆதரித்ததால் அவருக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது. இதனால் நமச்சிவாயம் கடும் அதிருப்தி அடைந்தார்.    இதையடுத்து கட்சித் தலைமை அவரை சமாதானப்படுத்தி அமைச்சர் பதவியை வழங்கியது. 15க்கும் மேற்பட்ட முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டன. இருப்பினும் கடந்த ஆண்டு அதிரடியாக நமச்சிவாயத்தின் மாநிலத் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. இதனால் முதல்வர் நாராயணசாமிக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடும், மோதலும் தொடந்து இருந்து வந்தது.

 இந்த நிலையில், கடந்த 25ம் தேதி அவர் அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அவருடன் எம்எல்ஏ தீப்பாய்ந்தானும் ராஜினாமா கடிதம் கொடுத்தார். இதையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக விமானம் மூலம் டெல்லி சென்ற நமச்சிவாயம் மற்றும் தீப்பாய்ந்தான் ஆகியோர் நேற்று மாலை பாஜ கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்று தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் முன்னிலையில் பாஜவில் இணைந்தனர். இதையடுத்து நமச்சிவாயம் கூறுகையில்,\”  வளமான புதுவை, வலிமையான பாரதம் அமைக்க தான் பாஜவுடன் நாங்களும் தற்போது ஒன்று சேர்ந்துள்ளோம். நாராயணசாமியின் கடந்த கால தவறான வழிகாட்டுதலால் புதுவை மாநிலம் வீனாகிவிட்டது. 2021 தேர்தலில் பாஜ ஆட்சியை அமைக்க நாங்கள் இரவு பகல் பாராது கண்டிப்பாக உழைத்து வெற்றி பெறுவோம் என்றார்.

Related Stories: