2 முறை அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு பாமகவை ஓரங்கட்டுகிறதா அதிமுக தலைமை?: அரசியல் களத்தில் நடக்கும் பரபரப்பு பின்னணி தகவல்கள்

சென்னை: இரண்டு முறை அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை பிறகு, பாமகவை அதிமுக கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டசபைக்கு மே மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகிறது. திமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தேர்தல் அறிவிப்பு வெளிவந்தவுடன் முறையாக அறிவிக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதிமுக கூட்டணியில் கடந்த மக்களவை தேர்தலில் இணைந்து போட்டியிட்ட பாஜ, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள், மீண்டும் சட்டப்பேரவை தேர்தலில் இணைந்து போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் கேட்கும் தொகுதிகள், அவர்கள் வைக்கும் கோரிக்கையை பார்க்கும் போது கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுக அதிர்ந்து போயும், மலைத்து போயும் உள்ளது. பாஜ 60 தொகுதிகளை கேட்கிறது. இதில் சிறிய கட்சிகளுக்கு நாங்கள் இடங்களை ஒதுக்குகிறோம் என்று கூறுகிறது. தேமுதிகவுக்கு ஜெயலலிதா இருந்தபோது ஒதுக்கிய 41 தொகுதிகளை மீண்டும் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இதேபோல பாமகவும் அதிக அளவு தொகுதிகளை கேட்டு வருகிறது. இவ்வாறு ஒவ்வொரு கட்சியும் கேட்கும் இடங்களை பார்த்தால் அதிமுக சொற்ப இடங்களில் தான்  போட்டியிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கட்சிகள் கேட்கும் இடங்களை அளிக்க முடியாது என்பதில் அதிமுக கறாராக கூறி விட்டது.

இதனால், கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு எவ்வளவு இடங்களை ஒதுக்குவது என்பதில் ஒரு குழப்பமான நிலை அதிமுகவில் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாமக அதிக தொகுதிகள் மட்டுமல்லாமல், வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதனை தேர்தலுக்கு முன்னதாகவே அறிவிக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளது.ஆனால், பாமகவின் இந்த கோரிக்கையை ஏற்க அதிமுக தயக்கம் காட்டி வருகிறது. பாமகவுடன் 2 கட்டமாக அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினால் மட்டுமே கூட்டணிக்கு வருவோம் என்று ராமதாஸ் அறிவித்து விட்டார்.

இந்நிலையில், ராமதாஸ் தலைமையிலான பாமக கூட்டம் திடீரென 31ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பாமகவின் கோரிக்கை தொடர்பாக அதிமுக எந்த முடிவையும் எடுக்காததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதிமுகவின் வடக்கு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பாமகவை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். ஆனால் மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பாமகவுக்கு அடி பணிந்து போக கூடாது என்றும் கூறி வருகின்றனர். இதனால், தான் அதிமுக அமைதி காத்து வருவதாக கூறப்படுகிறது. 31ம் தேதி பாமக நிர்வாக குழுவில் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்த்து அடுத்த கட்ட நடவடிக்கையை தொடங்கலாம் என்றும் அதிமுக இருந்து வருகிறது. இது குறித்து அதிமுக நிர்வாகிகளிடம் கேட்ட போது கூறியதாவது:

கடந்த முறை மக்களவை தேர்தலில் பாமக அதிமுக கூட்டணியில் இணைந்தது. அவர்களுக்கு வழங்கப்பட்ட தொகுதிகளுக்கான தேர்தல் செலவை நாங்களே ஏற்று கொள்கிறோம் என்று அறிவித்தோம். தொகுதிகளில் நாங்களே இறங்கி அந்த பணியை செய்கிறோம் என்றோம். ஆனால், பாமக தலைமை தேர்தல் செலவை எங்களிடம் வழங்க வேண்டும் என்று கூறியது. அவர்கள் கூறியவாறே தேர்தல் செலவை வழங்கினோம். ஆனால், அவர்கள் நாங்கள் வழங்கிய பணத்தை முறையாக செலவழிக்கவில்லை. வெற்றி வாய்ப்பு ஏற்படும் என்பவர்களுக்கு வழங்கவில்லை.

வசதியானவர்களுக்கே சீட்டை வழங்கினர். இதனால், தான் மக்களவை தேர்தலில் தோல்வியை நாங்கள் சந்திக்க நேரிட்டது. இதே போல் இந்த சட்டப்பேரவை தேர்தலில் நோட்டுக்கும், சீட்டுக்காகவும் தான் இடஒதுக்கீடு என்ற ஒன்றை எடுத்து இவ்வளவு பிரச்னை செய்கிறார்கள். அவ்வாறு பாமக கேட்பதை போல வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் எங்கள் சமூகத்தினருக்கும் இட ஒதுக்கீடு கேட்டு போர்க்கொடி தூக்கும். அப்படி அவர்கள் எல்லாரும் போர்க்கொடி தூக்கினால் தேவையில்லாத பிரச்னை தான் ஏற்படும். எனவே, பாமக இறங்கி வரட்டும் என்று விட்டு விட்டோம். அவர்கள் இறங்கி வந்தால் கூட்டணியில் சேர்ப்போம். இல்லாத பட்சத்தில் அவர்கள் சொல்வதை போல தனித்து போட்டியிடட்டும் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பாமக அதிக தொகுதிகள் மட்டுமல்லாமல், வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதனை தேர்தலுக்கு முன்னதாகவே அறிவிக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளது.

Related Stories: