தமிழக அரசால் ரூ.70 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் இன்று திறப்பு: முதல்வர் எடப்பாடி தலைமையில் பிரமாண்ட விழா

சென்னை: தமிழக அரசால் ரூ.70 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தை இன்று காலை 11 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். இதையொட்டி சென்னையில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடம் அமைந்துள்ள வளாகத்திலேயே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு நினைவிடம் அமைக்க சுமார் ரூ.70 கோடியை தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இதைத்தொடர்ந்து, 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பில் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிக்கு கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். சுமார் 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. இதையடுத்து ஜெயலலிதா நினைவிடத்தை இன்று காலை 11 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்கிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார். இதற்காக ஜெயலலிதா நினைவிடம் அமைந்துள்ள இடத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர் தனபால், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து அதிமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள். ரூ.ஜெயலலிதா நினைவிடம் அருகே, அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார்  பூங்கா அமைக்கவும் தமிழக அரசு ₹12 கோடியும், நினைவிடத்தின் 5 ஆண்டு  பராமரிப்பு பணிக்கு ₹9 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவில் ஜெயலலிதா ஆட்சி காலத்தில்  கொண்டு வரப்பட்ட திட்டங்கள், அவரது வீடியோ மற்றும் ஆடியோ பேச்சின் பதிவு,  அவர் படித்த நூல்கள், அவரது சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் வைக்கப்படுகிறது.

இதில், ஜெயலலிதா பேசுவது போன்று  தொடு திரை மூலம் ஒளி, ஒலி காட்சிகள் வைக்கப்படுகிறது. இந்த  அருங்காட்சியகம், அறிவுசார் மையம் முழுக்க, முழுக்க ஏசி வசதி  செய்யப்படுகிறது. தற்போது இந்த பணிகள் முடிவடையாததால், பிப்ரவரி மாதம் திறந்து திறந்து வைக்கப்பட உள்ளது.

ஜெயலலிதா நினைவிடம் இன்று காலை திறக்கப்படும் அதே நேரத்தில், இன்று காலை 10.30 மணிக்கு ஜெயலலிதாவின் உயிர் தோழி சசிகலா 4 வருட சிறை வாழ்க்கையை முடித்துவிட்டு பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையாகிறார். சசிகலா விடுதலையானவுடன், ஜெயலலிதா சமாதிக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், இன்று சிறையில் இருந்து விடுதலையானாலும் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெறுவார். அல்லது பெங்களூரிலேயே ஒரு வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டு பிப்ரவரி மாதம் சென்னை வருவார் என்று கூறப்படுகிறது.

Related Stories: