மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இறந்து கிடந்த கோழி குடிநீருடன் புழுக்களும் வந்ததால் மக்கள் அதிர்ச்சி-உடனடியாக தண்ணீர் நிறுத்தம்

கொள்ளிடம் : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புளியந்துறை கிராமத்தில் குண்டுமேட்டு தெரு உள்ளது. இந்த கிராமத்துக்கு அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீர், இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு மின்மோட்டார் மூலம் ஏற்றப்பட்டு பின்னர் அங்கிருந்து மீண்டும் தெருக்களில் உள்ள குழாய்கள் மூலம் பொதுமக்களுக்கு தினம்தோறும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று குண்டுமேட்டு தெருவில் உள்ள கிராம மக்கள் பைப்பில் குடிநீர் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது குழாயில் இருந்து வந்த தண்ணீருடன் சேர்ந்து புழுக்களும் வந்தது. இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் தண்ணீருடன் கோழி இறகுகளும் சேர்ந்து வந்தன.

இந்த தகவல் கிடைத்ததும் புளியந்துறை ஊராட்சி தலைவர் நேதாஜி சம்பவ இடத்துக்கு சென்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை ஆய்வு செய்தார். அப்போது தொட்டிக்குள் இறந்து அழுகி துர்நாற்றம் வீசிய நிலையில் கோழி கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக குண்டுமேட்டு தெருவில் உள்ள மக்கள் யாரும் தண்ணீர் பிடிக்க வேண்டாம், குடிநீர் தொட்டி மற்றும் குழாய்களை சுத்தம் செய்த பின்னரே குடிநீர் வழங்கப்படும் என்று ஊராட்சி தலைவர் நேதாஜி அறிவித்தார். இதைதொடர்ந்து குண்டுமேட்டு தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>