மழைநீர் தேங்கியதால் அழுகி போன நிலக்கடலை பயிர்கள்-நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

சாயல்குடி :  விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியதால் சாயல்குடி, பசும்பொன் பகுதியில் நிலக்கடலை செடிகள் அழுகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சாயல்குடி அருகே எஸ்.தரைக்குடி, செவல்பட்டி, கன்னிராஜபுரம், நரிப்பையூர், கூரான்கோட்டை, பூப்பாண்டியபுரம், பெரியகுளம், கடுகுசந்தை, சத்திரம், மேலச்செல்வனூர், சாத்தங்குடி, காவாகுளம், மேலக்கிடாரம் உள்ளிட்ட கடலாடி வட்டாரத்தில் 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 2,500 ஏக்கரிலும், நயினார்கோயில் அருகே பாண்டியூர், சேமனூர், பரமக்குடி அருகே அக்ரமேசி, கமுதி அருகே பசும்பொன், மருதகநல்லூர் போன்ற பகுதிகள் உட்பட மாவட்டத்தில் சுமார் 10ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்களில் இந்தாண்டு நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டது.

இந்தாண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாத கடைசியில் துவங்கியது. இதனால் மாவட்டத்தில் நிலக்கடலை பயிரிடப்படும் விவசாய நிலங்களை சீரமைத்து, உழவார பணிகளை செய்து வந்தனர். 105 நாட்களுக்குள் மகசூல் தரக்கூடிய பயிரான நிலக்கடலை  கார்த்திகை மாதமான கார்த்திகை பட்டத்தில் பயிரிடப்படுவது வழக்கம். இதற்கு ஏதுவாக நவம்பர் மாதம் முதல் இப்பகுதியில் பெய்து வரும் மழைக்கு மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் நிலக்கடலை விதைகளை விதைத்தனர்.

இந்நிலையில் இரண்டு புயலின் காரணமாக தொடர் மழை பெய்தது. இதனால் சாயல்குடி, பசும்பொன் பகுதிகள் உட்பட மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் பயிர்கள் நன்றாக வளர்ந்து வந்தது. விவசாயிகள் அடி உரம் போன்ற உரங்கள் இட்டு, களை எடுத்தல் போன்ற பராமரிப்பு பணிகளை செய்து வந்தனர்.

இந்நிலையில் ஜன.11ம் தேதி முதல் இப்பகுதியில் தொடர்ச்சியாக கனமழை பெய்தது. இதனால் நிலக்கடலை பயிரிடப்பட்ட செம்மண் நிலம் உள்ளிட்ட விவசாய நிலங்களில் மழை தண்ணீர் தேங்கி நின்றது. நாட்கணக்கில் தேங்கி நின்றதால் பயிர்கள் அழுகி நாசமானது. வேர்ப்பகுதியில் கடலை பிஞ்சு விட்ட நிலையில் செடிகள் அழுகியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

விவசாயிகள் கூறும்போது, ‘‘இந்தாண்டு நல்ல மழை பெய்ததால் நிலக்கடலை அமோகமாக விளைச்சல் கிடைக்கும் என எதிர்பார்த்து, கடன் வாங்கி பயிரிட்டு, பராமரிப்பு செய்து வந்தோம். இம்மாதம் பெய்த தொடர் மழைக்கு தண்ணீர் தேங்கி வேர்ப்பகுதி பாதிக்கப்பட்டது. இதனால் பிஞ்சு விட்டிருந்த தருவாயில் செடிகள் அழுகி நாசமானது.

கருகினால் கூட கடலை சண்டு ஆடு, மாட்டிற்கு தீவனமாக பயன்பட்டிருக்கும். ஆனால் அழுகி போனதால் சண்டு கூட மிஞ்சாதது வேதனையாக உள்ளது. இதனால் அரசு பாதிக்கப்பட்ட நிலக்கடலைக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

பயிர் பயிர்காப்பீடு திட்டத்தில் பிரிமீயத் தொகையாக ஏக்கருக்கு ரூ.294.75 கட்டியுள்ளோம். இழப்பீடு தொகையை விரைவாக வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: