சாலையோரங்களில் கழிவுகளுக்கு தீ வைப்பதால் விபத்து அபாயம்

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அருகே சாலையோரத்தில் விவசாய விளைபொருட்கள் கழிவுகளுக்கு தீ வைப்பதால் விபத்து அபாயம் நிலவுகிறது. திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையம், சித்தரேவு, சிங்காரக்கோட்டை, நரசிங்கபுரம், கதிர்நாயக்கன்பட்டி, ரெங்கராஜபுரம், நெல்லூர், ஒட்டுப்பட்டி பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக சோளம், கம்பு போன்ற மானாவரி பயிர்கள் விளைச்சல் அதிகரித்துள்ளன. ஒருசில பகுதிகளில் அறுவடை துவங்கியுள்ளது. விளைநிலங்களில் விளைந்த சோளம், கம்பு போன்ற தானியங்களை கதிரிலிருந்து பிரித்தெடுக்க அய்யம்பாளையம்-சித்தையன்கோட்டை சாலை கதிடிரடிக்கும் உலர்களமாக சிறு, குறு விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

 

இந்த சாலையில் கம்பு, சோளம் போன்ற தானியங்களை கொட்டி டிராக்டர் மூலம் தானியங்களை பிரித்து எடுக்கின்றனர். பின்னர் அவற்றின் கழிவுகளை சாலையோரத்தில்  கொட்டி தீ வைத்துவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் பற்றி எரியும் தீ மற்றும் புகையால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கின்றது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளகின்றனர். மேலும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் விபத்து அபாயமும் நிலவுகிறது. விபத்து ஏற்படுத்தும் வகையில் விவசாய விளைபொருட்கள் கழிவுகளுக்கு தீ வைப்பவர்கள் மீது சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>