டெல்லி குடிசைவாசிகளுக்கு 10 ஆயிரம் வீடுகள்: ஒதுக்கீடு செய்ய கெஜ்ரிவால் உத்தரவு

புதுடெல்லி: ஜேஜே காலனி குடிசைவாசிகளுக்கு தளம் போட்ட வீடுகளை ஒதுக்கும் நடவடிக்கையை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த பரிசீலனை கூட்டம் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் நேற்று நடைபெற்றது. நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உள்பட உயரதிகாரிகள் பலரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஜேஜே காலனி எனப்படும் சேரிகளில் தங்கியுள்ள மக்களுக்கு அறிவிக்கப்பட்ட புனரமைப்பு திட்டம் குறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகளுடன் கெஜ்ரிவால் தீவிர ஆலோசனை நடத்தினார்.

கெஜ்ரிவாலிடம் அப்போது அதிகாரிகள் கூறுகையில், ‘‘14 ஜேஜே காலனிகளில் மொத்தம் 9,315 தளம் வேய்ந்த வீடுகள் தயாராக உள்ளது. குடிசை  மக்களுக்கு அந்த வீடுகளை உடனே ஒதுக்கலாம். மேலும் 73 ஜேஜே காலனிகளில் 28,910 கான்கிரீட் வீடு கட்டும் பணிகள் விரைவாக நடைபெறுகிறது’’, எனக் கூறினர். அதையடுத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு கெஜ்ரிவால் கூறுகையில், ‘‘நிர்ணயித்த கால அவகாசத்தில் அனைத்து வீடுகளும் கட்டி முடிக்க வேண்டும்.

குறிப்பிட்ட கெடுவில் ஜேஜே காலனியில் வசிக்கும் பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்கள் அனைவரையும் கான்கிரீட் வீடுகளுக்கு மாற்ற வேண்டும். அதற்காக பணிகளை எவ்வளவு விரைவில் முடிக்க முடியும் என திட்டமிட்டு அதற்கேற்ற வகையில் பணிகளை முடுக்கி விட வேண்டும்’’, என  எச்சரித்தார். அது மட்டுமன்றி, கட்டுமானம் தொடர்பாக எந்த இடையூறு ஏற்பட்டாலும், அதனை தவிர்க்கும் நடவடிக்கைகளில் சுணக்கம் இருக்கக் கூடாது எனவும் அவர் அறிவுறுத்தினார்.

திட்ட புள்ளிவிவரம்

* ஜேஜே காலனிகளில் 3 கட்டங்களாக பிரித்து மொத்தம் 89,400 வீடுகள் கட்டித்தரப்பட உள்ளன.

* முதல் கட்டத்தில் 41,400 அடுத்த ஆண்டு இறுதிக்குள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

* இதில் ஜகாங்கீர்புரியில் 7,400, சுல்தான்புரியில் 1,060, பவானாவில் 855 வீடுகள் என 9,315 வீடு தயாராக உள்ளது.

* 2ம் கட்டத்தில் 18,000 வீடுகளுக்கு இலக்கு பின்னர் நிர்ணயிக்கப்படும்.

* தொடர்ந்து 3ம் கட்டத்தில் 30,000 வீடுகள் கட்டப்படும்.

* இந்த வீடுகள் அடுக்குமாடி குடியிருப்பாக அமையும்.

* 8,000 வீடுகள் ஒரு காலனியாக அமைக்கப்படும்.

* ஒரு வீட்டுக்கு டெல்லி நகர்ப்புற தங்குமிட மேம்பாட்டு ஆணையம் ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கும்.

* மொத்தம் ₹3.312 கோடி நிதி ஒதுக்கி அறிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories: