விவசாயிகள் டிராக்டர் பேரணிக்கு நீதிமன்றம் தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்; மத்திய அரசு மனு வாபஸ்

புதுடெல்லி: ‘டெல்லியில் குடியரசு தினத்தில் நடத்துவதாக விவசாயிகள் அறிவித்துள்ள டிராக்டர் பேரணிக்கு நீதிமன்றம் தடை விதிக்க முடியாது’ என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு தனது மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டது. மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து 56 நாளாக போராடி வரும் விவசாயிகள் வரும் 26ம் தேதி, குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். இப்பேரணிக்கு தடை விதிக்க கோரி மத்திய அரசு மற்றும் டெல்லி போலீசார் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘குடியரசு தினத்தன்று விவசாயிகள் இடையூறு செய்யும் பட்சத்தில் அது நாட்டின் ஜனநாயக உரிமைக்கு எதிராக அமைந்து விடும்.

அது மிகப்பெரிய தர்மசங்கடத்தை நாட்டுக்கு ஏற்படுத்தும். அதனால் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் போபன்னா மற்றும் ராமசுப்ரமணியன் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ‘‘இந்த விவகாரத்தை நீதிமன்றம் உடனடியாக கையில் எடுத்து ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும். ஏனெனில் குடியரசு தின விழா இன்னும் சில தினங்களில் வரவுள்ளது’’ என்றார்.

அதற்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, ‘‘இது சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்னை. இதில் நீதிமன்றம் எப்படி தலையிட முடியும்’’ என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா, ‘‘இது காவல்துறையின் கடமை என கூறப்பட்டாலும், தற்போது இருக்கும் சூழலில் அவர்கள் நேரடியாக நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அது வேறு விதமான புரிதலுக்கு மாறுவதற்கு வாய்ப்புள்ளது. அதனால் நீதிமன்றமே தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த தலைமை நீதிபதி, ‘‘விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு தடை விதிக்கக்கோரிய இடைக்கால மனுவை விசாரிக்க முடியாது. அதில் முகாந்திரம் இல்லை. ஏனெனில் இது முழுவதுமாக சட்டம் ஒழுங்கு சார்ந்த பிரச்னை. இதில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறக்க முடியாது. இதில் முடிவெடுக்க வேண்டியது டெல்லி போலீஸ்தான். அதற்கான அதிகாரத்தை அரசு தான் அவர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் ஒரு போராட்டத்தை நடத்த அல்லது தடுத்து நிறுத்த முடிவெடுக்க வேண்டிய அதிகாரிகளே நீதிமன்றத்தை நாடுவதை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த மனுவை திரும்ப பெற அனுமதிக்கிறோம்’’ என்றார்.

இதனால் மத்திய அரசு தரப்பில் வேறு வழியின்றி மனுவை வாபஸ் பெற்றனர். இதைத் தொடர்ந்து, 40 விவசாய சங்க பிரதிநிதிகள் பேரணி வழித்தடம், முன்னேற்பாடுகள் தொடர்பாக டெல்லி, அரியானா, உபி போலீஸ் உயர் அதிகாரிகளை சந்தித்து பேச முடிவு செய்துள்ளனர்.

குழு அமைத்ததில் பாரபட்சம் பார்ப்பதா?

விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண உச்ச நீதிமன்றம் அமைத்த 4 பேர் குழு மத்திய அரசுக்கு ஆதரவானதாகவும், வேளாண் சட்டத்தை ஆதரித்தவர்கள் என்றும் விவசாய சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன. இதனால், அக்குழு முன்பாக ஆஜராக மாட்டோம் என்றும் அறிவித்துள்ளனர். இதற்கு நீதிபதிகள் நேற்று கடும் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து நீதிபதிகள், ‘‘இந்த விஷயத்தில் பாரபட்சம் என்ற கேள்வி எங்கிருந்து எழுந்தது. குழுவுக்கு நாங்கள் தீர்ப்பளிக்கும் எந்த அதிகாரத்தையும் வழங்கவில்லை. குழு முன்பாக ஆஜராக விவசாயிகள் விரும்பவில்லை என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கும். அதை தெரிவித்திருப்பார்கள்.

அதை வைத்து யாரையும் முத்திரை குத்தக்கூடாது. ஒரு வழக்கை விசாரிக்கும் போது நீதிபதிகளுக்கே கூட தனிப்பட்ட கருத்து என்று ஒன்று இருக்கும். அதற்காக அவர்கள் நடுநிலையுடன் செயல்பட முடியாது என்று அர்த்தம் கிடையாது. எனவே, யாரையும் முத்திரை குத்தாதீர்கள். குழுவிற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். விவசாயிகளும் இந்த விவகாரத்தில் அமைதி காக்க வேண்டும். இதில் ஒருவேளை மீண்டும் வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால், அப்போது வேண்டுமானால் மீண்டும் போராட்டத்தை தொடரலாம். அதனால் விவசாயிகள் தற்போது உள்ள நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, நீதிமன்றம் அமைத்துள்ள குழு முன்பாக ஆஜராகி தங்களது கோரிக்கை குறித்து தெரிவிக்க முன்வர வேண்டும்’’ என அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: