போலீஸ் துணையோடு அதிமுக பேனர்கள் பெண்களை மிரட்டி முதலமைச்சர் கூட்டத்திற்கு அழைப்பு: திமுக எம்எல்ஏகள் கலெக்டரிடம் புகார்

செங்கல்பட்டு: முதல்வர் வருகைக்கு, பெண்களை மிரட்டி அதிமுகவினர் அழைத்து செல்கின்றனர். போலீஸ் துணையுடன் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர்கள் வைத்துள்ளனர் என காஞ்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில், செங்கல்பட்டு கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தா.மோ.அன்பரசன், எம்எல்ஏகள் வரலட்சுமி மதுசூதனன், இதயவர்மன், ரமேஷ்அரவிந்த் ஆகியோர், செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிசிடம் நேற்று புகார் மனு அளித்தனர். பின்னர், தா.மோ.அன்பரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 2 நாள் பிரசாரம் செய்கிறார். இதற்காக அதிமுகவினர் உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர் ஆகிய பகுதிகளில் சாலையை ஆக்கிரமித்து 5 அடிக்கு ஒரு  பிரமாண்ட  பேனர்கள் வைத்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. முதல்வரின் கூட்டத்துக்கு அந்தந்த பிடிஓகள் மூலம், மகளிர் சுய உதவிக் குழுவில் இருந்து நீக்கிவிடுவோம். 100 நாள் வேலை தர மாட்டோம் என மிரட்டி, பெண்களை அழைத்ததாக கூறப்படுகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும்.

எடப்பாடி பழனிசாமியின், முகத்தை பார்க்க மக்களுக்கு  ஆர்வம்  இல்லை. கூட்டத்தை பெரிய அளவில் காட்டுவதற்காக அதிகாரிகள் மூலம் பெண்களை மிரட்டி வரவழைக்கின்றனர். போலீஸ் துணையோடு அதிமுக பேனர்கள் வைக்கப்படுகின்றன. உயர்நீதிமன்ற உத்தரவை துளிக்கூட மதிக்கவில்லை. மேலும், திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் 2 கோடி மக்கள் கலந்து கொண்டுள்ளனர். அதிமுகாவை நிராகரிக்கிறோம் கூட்டத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த பொது மக்கள் தயார் நிலையில் உள்ளனர். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட சார்பில் இதுவரை 322 கிராம சபைக் கூட்டங்கள் நடந்துள்ளது. இதில் 2 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டுள்ளனர் என்றார்.

Related Stories:

>