தமிழக அரசின் அறிவுறுத்தல்படி பள்ளிகளை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன: காஞ்சி கலெக்டர் பேட்டி

காஞ்சிபுரம்: தமிழக அரசின் அறிவுறுத்தல்படி, பள்ளிகளை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என காஞ்சிபுரம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறினார். 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் தொடங்கப்பட்டதால் பெரிய காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 97 உயர் நிலைள், 137 மேல்நிலை என மொத்தம் 234 பள்ளிகள் உள்ளன. உயர், மேல்நிலைப்பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 10ம் வகுப்பில் 9538 மாணவர்கள், 8374 மாணவிகள் என 17912 பேரும், 12ம் வகுப்பில் 7165 மாணவர்கள், 7702 மாணவிகள் என 14867 பேரும் படிக்கின்றனர்.

மாவட்டத்தில் 102 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், 20 அரசு நிதி உதவிப்பெறும், 62 மெட்ரிக், 46 சிபிஎஸ்சி மற்றும் பிற வாரியம், 4 சுய நிதி என மொத்தம் 234 பள்ளிகள் உள்ளன. அனைத்து பள்ளிகளிலும் தமிழக அரசின் அறிவுறுத்தல்படி, பள்ளிகளை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகள் பள்ளியில் நுழையும் முன் அவர்களது உடல் வெப்பநிலை பரிசோதித்து, முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்யப்படுகிறது. ஒவ்வொரு வகுப்பறையும் சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. வகுப்பறைகளில் மாணவ, மாணவிகள் பயன்படுத்தும் வகையில் சானிடைசர் வைக்கப்பட்டுள்ளது. ஒரு வகுப்பறையில் 25 மாணவ, மாணவிகள் மட்டுமே அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் மாணவர்கள் அறியும் வண்ணம் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பதாகைகள், அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளன என்றார்.

Related Stories: