விவசாயிகளை பாதிக்கும் தமிழக அரசு வேளாண் சட்டம் ரத்து செய்யக்கோரி வழக்கு: அரசு செயலர்கள் பதிலளிக்க உத்தரவு

மதுரை: விவசாயிகளை பாதிக்கும் தமிழக அரசின் வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கில் அரசு செயலர்கள் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், யா.ஒத்தக்கடை நரசிங்கத்தைச் சேர்ந்த வக்கீல் லூயிஸ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், தமிழக விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான சட்டம் தமிழகத்தில் அமலாகியுள்ளது. தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணையம் மற்றும் சேவைகள் (ஊக்குவித்தல் மற்றும் எளிதாக்குதல்) சட்டம் -2019 கொண்டு வரப்பட்டுள்ளது. ஆளுநர் மற்றும் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு கடந்த 1.10.2019ல் அரசிதழில் வெளியாகியுள்ளது. இச்சட்டம் விவசாயத்துறையில் தனியார் ஒப்பந்ததாரர்களை அனுமதித்துள்ளது.

இது, விவசாயத்தை அடிப்படையாகக்கொண்ட தமிழகத்தில் பெரும் பாதிப்ைப ஏற்படுத்தும். தமிழக அரசின் இச்சட்டத்தால் ஒரு விவசாயி நேரடியாக தனியார் ஒப்பந்ததாரருடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும். இதற்காக ஒப்பந்ததாரர் விரும்பிய இடத்தில் கொள்முதல் முகாம் அமைத்து அவர்களது விலைக்கு கொள்முதல் செய்ய முடியும். விவசாயத்தின் போது ஏற்படும் இழப்பை ஈடுசெய்யும் வகையிலான பயிர்காப்பீட்டு திட்டத்தில் பணம் செலுத்த முடியாது. இன்சூரன்ஸ் முறை ரத்தாகும். விவசாய ஒப்பந்தம் தொடர்பாக ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், நேரடியாக நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காண முடியாது.

இதற்கென அமைக்கப்பட்ட வருவாய் கோட்டக்குழுவின் மூலமே தீர்வு காண முடியும். இதை எதிர்த்து மாவட்ட அளவிலான குழுவில்தான் அப்பீல் செய்ய முடியும். இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கக்கூடும். இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக அரசு தான் இச்சட்டத்தை கொண்டு வந்துள்ளது. எனவே, விவசாயிகளின் நலன் கருதி, தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணையம் மற்றும் சேவைகள் (ஊக்குவித்தல் மற்றும் எளிதாக்குதல்) சட்டம் -2019ஐ செயல்படுத்த தடைவிதிக்க வேண்டும். இது சட்டவிரோதம் என்பதால் செல்லாது என அறிவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் மனுவிற்கு சட்டத்துறை செயலர், வேளாண்மைத்துறை செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை பிப். 15க்கு தள்ளிவைத்தனர்.

Related Stories:

>