தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கே அமோக வெற்றி: முத்தரசன் பேட்டி

நாகர்கோவில்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களிடம் கூறியது: வேளாண் சட்டங்களை கைவிட கோரி 26ம் தேதி நாடு முழுவதும் நடக்க உள்ள டிராக்டர் பேரணியை தடுத்து நிறுத்தும் முயற்சியில் மத்திய அரசு கோர்ட் மூலமாக ஈடுபட்டு வருகிறது. இந்த முயற்சியை அரசு கைவிட வேண்டும். தமிழகத்திலும் டிராக்டர் பேரணி நடைபெறும். பேரணிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி முழு ஆதரவை தெரிவித்து கொள்கிறது. டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகியுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளை சரியாக கணக்கெடுத்து விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ₹30 ஆயிரம் வழங்குவதுடன், விவசாய கடனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்கிறார். அவர் தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை கேட்டுப்பெற வேண்டும். மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை தராவிட்டால் தமிழகத்தில் அனைத்து கட்சிக் கூட்டம் கூட்டி நிர்ப்பந்தம் அளிக்க வேண்டும். சென்னையில் நடந்த விழாவில் பேசிய குருமூர்த்தி நீதிபதிகளை விமர்சித்துப் பேசியுள்ளார். சசிகலாவையும் விமர்சித்துள்ளார். அமைச்சர்கள் கூட்டு கொள்ளை அடிக்கிறார்கள் என்று கலைவாணர் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளார். ஆனால் அதற்கு முதலமைச்சரோ, அமைச்சர்களோ மறுப்பு அல்லது கண்டனம் தெரிவிக்கவில்லை.

எனவே இந்த கூட்டு கொள்ளை உண்மையாக இருக்குமோ என்ற ஐயப்பாடு ஏற்பட்டுள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் தெளிவான தீர்ப்பை அளிக்க தயாராகி விட்டனர். தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி கட்சி அமோக வெற்றிபெறுவது உறுதி ஆகிவிட்டது.

Related Stories: