தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது லாரி மோதி படுகாயமடைந்த யானைக்கு தொடர் சிகிச்சை: லாரி டிரைவர் மீது வழக்கு

ஓசூர்: ஓசூர் அருகே, தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது, கன்டெய்னர் லாரி மோதியதில் படுகாயமடைந்த யானையை, கிரேன் மூலம் மீட்ட வனத்துறையினர், அய்யூர் வனப்பகுதியில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சானமாவு வனப்பகுதிக்கு கடந்த மாதம் 100க்கும் மேற்பட்ட யானைகள் வந்து, பல குழுக்களாக பிரிந்து சுற்றி திரிந்தன. இதில் 50 யானைகளை, தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு வனத்துறையினர் கடந்த வாரம் விரட்டியடித்தனர். இதனிடையே, 20க்கும் மேற்பட்ட யானைகள், சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டு, வனத்தை ஒட்டிய கிராமங்களில் உள்ள விளைநிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி வந்தன. இதில் ஒரு ஆண் யானை மட்டும் தனியாக பிரிந்து சென்று, பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் கடந்த 2 நாட்களாக சுற்றி திரிந்தது.

இந்த ஒற்றை யானை, இரவு நேரங்களில் ஓசூர் அருகே பேரண்டப்பள்ளியில் கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக நின்று, சாலையை கடக்க முயன்று வந்தது. ஆனால், அதிகப்படியான வாகனங்கள் சாலையை கடந்து சென்றதால், யானையால் சாலையை கடக்க முடியவில்லை.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில், ஒற்றை யானை சாலையை கடக்க முயன்றது. அப்போது, ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு சென்ற கன்டெய்னர் லாரி, யானை மீது பயங்கரமாக மோதியது. இதில் யானையின் வலது பின்னங்கால் மற்றும் வயிறு, தொடை பகுதியில் பலத்த அடிபட்டு, சாலையில் சுருண்டு விழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், படுகாயமடைந்த யானைக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

மேலும், வலி நிவாரணி செலுத்தப்பட்டு, யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இதனால் மயக்கமடைந்த யானையை, 5 மணி நேரம் போராடி, அதிகாலை 2 மணியளவில் கிரேன் மூலம் கன்டெய்னர் லாரியில் ஏற்றினர். பின்னர், தேன்கனிக்கோட்டை வனப்பகுதி அய்யூர்காட்டில் உள்ள சாமி ஏரி என்ற இடத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான மருத்துவகுழுவினர், கன்டெய்னர் மோதியதில் யானைக்கு பின்னங்காலில் கால்முறிவு ஏற்பட்டுள்ளதா என எக்ஸ்ரே எடுத்து, தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். யானையின் உடல்நிலையை, தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

 இந்த விபத்தை ஏற்படுத்திய கன்டெய்னர் லாரி டிரைவரான தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த சோலைமுத்து(34), லேசான காயமடைந்தார். அவர் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கன்டெய்னர் லாரியில் பெங்களூருவுக்கு ஆப்பிள் லோடு கொண்டு சென்று விட்டு, மீண்டும் சென்னைக்கு திரும்பியபோது இந்த விபத்து நடந்தது தெரியவந்துள்ளது. அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ், சோலைமுத்து மீது வனத்துறையினரும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

யானைக்கு 80 சதவீத உள்காயம் ஏற்பட்டுள்ளது

சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் யானையை, நேற்று காலை தர்மபுரி மண்டல வன பாதுகாவலர் தீபக் பில்ஜி, மாவட்ட வன அலுவலர் பிரபு ஆகியோர் பார்வையிட்டு, சிகிச்சை குறித்து கால்நடை மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் பிரபு கூறுகையில், ‘அடிபட்ட யானைக்கு 40 வயது இருக்கும். கன்டெய்னர் லாரி மோதியதில் யானைக்கு பின்னங்கால்களில் பலத்த உள்காயம் ஏற்பட்டுள்ளது. அய்யூர் வனப்பகுதிக்கு கொண்டு வந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. 70 முதல் 80 சதவீதம் உள் காயம் ஏற்பட்டுள்ளதால், தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெங்களூரு தேசிய பன்னார்கட்டா வன உயிரின பூங்கா மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,’ என்றார்.

Related Stories: