கொத்து கொத்தாக செத்து மடியும் அரசு வழங்கிய இலவச மாடுகள்: கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்

பந்தலூர்: பந்தலூர் பகுதியில் அரசு வழங்கிய இலவச கறவை மாடுகள் கொத்து கொத்தாக செத்து மடிவதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் முழுவதும் அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதிவாசி மக்களுக்கு இலவச கறவை மாடுகள் வழங்கப்பட்டது. இலவச மாடுகள் அனைத்தும் வயதானதாகவும், நோய்கள் தாக்கப்பட்டு, அடிமாடுகளாகவும், கறவை இல்லாத மாடுகளாகவும், வளர்ப்பதற்கு தகுதியில்லாத மாடுகளாகவும் உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.  

இதுவரை கூடலூர், பந்தலூர் பகுதியில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளதால் ஆதிவாசி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இது குறித்து ஆதிவாசி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், கால்நடை பராமரிப்பு துறையினருக்கும் பல்வேறு புகார்கள் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கண்டுகொள்ளாமல் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பந்தலூர் அருகே நெலாக்கோட்டை பகுதியில் வசித்து வரும் ஆதிவாசிகள் இந்திரா, கேத்தன், படிச்சி ஆகியோரது மாடுகள் இறந்தன. வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்ட மாடுகள் கொத்து கொத்தாக இறந்ததை பார்த்து அவர்கள் கண்ணீர் விட்டு அழுது புலம்பினர். மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆதிவாசி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: