பொங்கல் பண்டிகை கொண்டாட 9 மத்திய சிறைகளுக்கு 4.5 லட்சம் ஒதுக்கீடு: புகைப்படங்களை ஏடிஜிபிக்கு அனுப்ப உத்தரவு

வேலூர்: தமிழகத்தில் 9 மத்திய சிறைகளில் பொங்கல் பண்டிகையை கொண்டாட 4.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், 3 பெண்கள் தனிச்சிறைகள், 12 பார்ஸ்டல் சிறைகள், 5 துணை சிறைகள், 9 மாவட்ட சிறைகள், 95 கிளை சிறைகள்,  2 திறந்தவெளி சிறைகள் உள்ளன. இதில் சிறைக்காவலர்களின் பணிப்பளு காரணமாக ஏற்படும் மனஅழுத்தத்தை தவிர்க்க குடும்பத்துடன் அவர்கள்  பொங்கல் கொண்டாடுவதற்கான சூழல் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக 9 மத்திய சிறைகளில் பணியாற்றும் சிறைக்காவலர்கள் தங்கள் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு மத்திய  சிறைக்கும் தலா 50 ஆயிரம் வீதம் மொத்தம் 4.5 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட சிறைகளில் புதுக்கோட்டை சிறைக்கு மட்டும் 25 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் சிறைக்காவலர்கள் கூட்டாக தங்கள் குடும்ப  உறவுகளுடன் பொங்கல் கொண்டாடலாம்.இதில் பொங்கல் வழிபாடு மட்டுமின்றி விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், உறியடி போன்ற நிகழ்வுகளையும் நடத்திக் கொள்ளலாம் என்றும்  பொங்கல் பண்டிகை விழா கொண்டாட்டத்தை புகைப்படம் எடுத்து சிறைத்துறை ஏடிஜிபி அலுவலகத்திற்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் மத்திய சிறையில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் இன்று மாலை நடைபெற உள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள்  தெரிவித்தனர்.

Related Stories: