பஸ்சுக்காக காத்து நின்றபோது பரிதாபம் கிரில் சிக்கன் இயந்திரத்தில் சிக்கிய கல்லூரி மாணவி: மார்த்தாண்டத்தில் பரபரப்பு

மார்த்தாண்டம்: குமரி மாவட்டத்தில் முக்கியமான வர்த்தக நகரம் மார்த்தாண்டம். இங்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள், கேரளாவை சேர்ந்தவர்கள் என்று தினமும் பல்லாயிரம் மக்கள் வியாபாரிகள் வந்து செல்கின்றனர். இதனால் எப்போதும் பரபரப்புடன் காணப்படுவது வழக்கம்.

அருமனை உள்பட அந்த வழிதடத்தில் இயங்கும் பஸ்களுக்காக காந்தி மைதானம் மேம்பாலம் தொடங்கும் பகுதியில் பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தின் பின் பகுதியில் உணவகம் உள்பட பல்வேறு கடைகள் உள்ளன. இங்கு மேம்பாலம் இருப்பதால் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. அதோடு பஸ் நிறுத்தத்தில் நிழற்குடையும் அமைக்கவில்லை. பஸ் ஏற வருகிறவர்கள் வெயில், மழையில் நனைந்தபடி தான் நிற்க வேண்டும். இதனால் நீண்ட நேரம் நிற்க வேண்டியவர்கள் அருகில் உள்ள கடைகளின் முன் ஒதுங்கி நிற்பது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று மாலை கல்லூரி மாணவி ஒருவர் தாய் மற்றும் உறவினர்களுடன் இந்த பகுதியில் உள்ள கடைக்கு ரெடிமேட் ஆடை வாங்க வந்தார். பொருட்கள் வாங்கிய பிறகு அவர்கள் பஸ் நிறுத்தம் வந்தனர். பஸ்சுக்காக நின்றபோது மாணவியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. போனில் பேசியபடி மாணவி தனியாக சென்றார்.

அப்போது அங்குள்ள சிக்கன் கடையில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கிரில் சிக்கன் இயந்திரத்தின் சுழலும் சக்கரத்தில் மாணவியின் முடி சிக்கிக்கொண்டது. அடுத்த நொடிகளில் மாணவியின் முழு முடியும் அதில் சிக்கியது. இதனால் வலி தாங்க முடியாமல் அலறினார்.  

சத்தம் கேட்டு அங்கு ஏராளமானோர் திரண்டனர். உடனடியாக கருவியின் இயக்கம் நிறுத்தப்பட்டது. முடியை வெளியே எடுக்க முயன்றும் முடியவில்லை. இதனால் முடியை வெட்டி எடுக்கலாம் என்று முடிவு செய்தனர். ஆனால் முழு முடியும் இயந்திரத்தில் சிக்கி இருந்ததால் மெக்கானிக்கை வரவழைத்து இயந்திரத்தை கழற்றி மாணவியை அதில் இருந்து மீட்டனர். இதில் மாணவியின் தலை, கழுத்தில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் நேற்று அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: