சேத்துப்பட்டு பகுதியில் வேர்க்கடலை பயிர்களை மாடுவிட்டு மேய்க்கும் அவலம்

சேத்துப்பட்டு: தமிழகம் முழுவதும் நிவர்புயல் மற்றும் புரவி புயலால் கொட்டித்தீர்த்த மழையால் ஏரிகள், குளங்கள், குட்டைகள், கிணறுகள் நிரம்பியது. இந்நிலையில் பல்வேறு கிராமங்களில் நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பாளர்களால் அடைக்கப்பட்டதால், ஏரிகளில் இருந்து வௌியேறும் உபரிநீர் வயல்வெளிகளில் புகுந்து நெற்பயிர், மணிலா மற்றும் தோட்டப்பயிர்களை மூழ்கடித்துள்ளது. இதில், கிணற்றுப்பாசனத்தை நம்பி பல விவசாயிகள் வேர்க்கடலை பயிரிட்டுள்ளனர். வேர்க்கடலை செடியில் பூ பூத்து காய் பிடிக்கும் நிலையில் தொடர்ந்து பெய்த மழையால் செடிகள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் செடிகள் அழுகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஒன்றியத்தில் உள்ள மருத்துவாம்பாடி, இந்திரவனம், செவரப்பூண்டி, நம்பேடு செய்யானந்தல், ஆத்துறை, பெரணம்பாக்கம், மன்சுராபாத், மட்டப்பிறையூர், மண்டகொளத்தூர், வடமாதிமங்கலம் என பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து இப்பகுதி விவசாயிகளிடம் கேட்டபோது, ‘தொடர் மழை மற்றும் ஏரி நீர் புகுந்ததால் வேர்க்கடலை பயிர்கள் மூழ்கி அழுகிவிட்டது. இதனால் வேறுவழியின்றி கால்நடைகளை விட்டு மேய்க்கச்செய்துள்ளோம். வேளாண்மைத்துறை அதிகாரிகள் வந்து பார்வையிட்டு கணக்கெடுத்து சென்றனர். ஒரு ஏக்கருக்கு ரூ25 ஆயிரம் கடலைக்கு செலவு செய்துள்ளோம். தமிழக அரசு விவசாயிகளின் நலன்கருதி நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

Related Stories: