மத்திய அரசு எச்சரிக்கை 6 மாநிலத்தில் பறவை காய்ச்சல்: மேலும் பல மாநிலங்களில் அச்சம்

புதுடெல்லி: கேரளா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.  கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ள நிலையில், தற்போது பறவைக் காய்ச்சலும் இந்தியாவில் தலை தூக்கியுள்ளது. கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், அரியானா மற்றும் குஜராத் மாநிலங்களில் இது உறுதியாகி உள்ளது. மேலும், உத்தரப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் சந்தேகத்துக்கிடமான வகையில் பறவைகள் இறக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன. டெல்லியில் 16 பறவைகள் மர்மமாக உயிரிழந்து உள்ளதால், அதற்கான காரணத்தை அறிய அவற்றின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதனால், நீர்நிலைகள், பண்ணைகள், விலங்குகளின் சரணாலயங்கள் மற்றும் பறவைகள் தொடர்பான சந்தைகளை தீவிரமாகக் கண்காணிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தின் கங்ரா மாவட்டத்தில் பாங் வனவிலங்குகள் சரணாலயம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் வந்த வெளிநாட்டு பறவைகள் மொத்தமாக உயிரிழந்தன. மொத்தம் 3,409 பறவைகள் உயிரிழந்ததால் பீதி ஏற்பட்டது. அவற்றை ஆய்வு செய்த பிறகு எச்5என்1 வகை பறவைக் காய்ச்சல் என்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து அந்த ஏரி அமைந்துள்ள பகுதி முழுவதும் உடனே சீல் வைக்கப்பட்டு, கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. இம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாகூர் நேற்று இங்கு நேரில் ஆய்வு செய்தார். சட்டீஸ்கர் மாநிலம், பலோட் நகரில் உள்ள போண்டி கிராமத்தில் ஒரு காக்கை திடீரென கீழே செத்து விழுந்தது. சந்தேகமடைந்த கிராமவாசிகள் அதனை தீ வைத்து எரித்தனர். நேற்று முன் தினம் மீண்டும் 3 காக்கைகள் ஒரே நாளில் இறந்து கிடந்தன. இது பற்றி தகவல் கிடைத்ததும், அதிகாரிகள் அங்கு சென்று அவற்றின் உடல் பாகங்களை பரிசோதனைக்காக அனுப்பினர்.

முட்டை, சிக்கன் சாப்பிடலாமா?

பறவைக் காய்ச்சல் பரவும் சமயத்தில் முட்டை, சிக்கன் சாப்பிடுவது பாதுகாப்பானதா என்பது குறித்து நிபுணர்கள் அளித்த விளக்கங்கள் வருமாறு:

* முட்டை, சிக்கன் சாப்பிடுவதால் பறவைக் காய்ச்சல் பரவும் என்பதற்கு சொற்ப அளவிலான ஆதாரங்களே உள்ளன.

* வைரஸ் பாதிக்கப்பட்ட கோழியாகவே இருந்தாலும் கூட நன்கு சமைத்தால் அதிலுள்ள வைரஸ்கள் இறந்து போகும்.

* சிக்கன், கோழியை நன்கு சூடுபடுத்தும் போது அதன் மீதுள்ள வைரஸ்கள் இறந்துவிடும். அவைகளுக்கு உள்ளே இருக்கும் வைரஸ்கள் கூட இறந்து விடும்.

* எனவே, 70 டிகிரி செல்சியல் சூட்டில் இறைச்சியின் அனைத்து பாகங்களையும் சமைத்து சாப்பிட வேண்டும்.

* முட்டையை ஆப்பாயில், ஒன்சைடு ஆம்லெட் என அரைவேக்காட்டில் சாப்பிடாமல், நன்கு வேக வைத்து சாப்பிடுவது நன்று.

* முட்டையை வேக வைத்த பிறகு மஞ்சள் கரு திடமாக இருக்க வேண்டும். அது தண்ணீர் போல் உடைந்து ஒழுகினால் அந்த முட்டையை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

* பறவைகளின் மலம் மற்றும் பிற நீர்த்துளிகள் மூலமாகவே பரவும்.

* இது மனிதர்களுக்கு தொற்றும் வாய்ப்புண்டு. ஆனால், மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவாது.

* பறவைக் காய்ச்சல் ஏற்பட்டால் காய்ச்சல், இருமல், சளி, நெஞ்சு வலி, தொண்டை வறண்டு போதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

Related Stories: