சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு அனுமதி தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

புதுடெல்லி: சென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலை பணியை தொடங்கும்படி கடந்த மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யும்படி கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தக்கல் செய்யப்பட்டுள்ளது.  சென்னை - சேலம் இடையே ₹10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்க, 5 மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் விவசாய நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு கடந்த 2018ம் ஆண்டில் அரசாணையை வெளியிட்டது. இத்திட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சாலை அமைப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்த அறிவிப்புகள், அரசாணையை ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘புதிய அரசாணை அறிவிக்கையை பிறப்பித்து, மீண்டும் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்தலாம்,’ என கடந்த மாதம் 7ம் தேதி தீர்ப்பு அளித்தது.  சேலம் அயோத்தியாப்பட்டினத்தை சேர்ந்த யுவராஜ் என்பவர், இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நேற்று மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்த சாலை திட்டத்தை புதிய அறிவிக்கை செய்து செயல்படுத்த அனுமதி வழங்கியுள்ள நீதிமன்றம், அதில் உள்ள பல்வேறு முக்கிய குறைகளை கருத்தில் கொள்ளவில்லை. குறிப்பாக, தலைமை கணக்கு தணிக்கையாளரிடம் இத்திட்டத்துக்கான செலவினம் தொடர்பான எந்தவித தகவலோ அல்லது விவரங்களோ தாக்கல் செய்யப்படவில்லை. மேலும், இத்தகைய சாலை தினமும் 50 ஆயிரம் வாகனங்கள் செல்லும் இடங்களில்தான் தேவைப்படும். ஆனால், தமிழகத்தில் 20 ஆயிரத்திற்கும் கீழ்தான் வாகனங்கள் செல்கின்றன. வாகன நெரிசலும்  கிடையாது.  மேலும், சென்னை - சேலம் வழித்தடத்திற்கு ஏற்கனவே மூன்று நெடுஞ்சாலைகள் உள்ளன. அவற்றை விரிவாக்கம் செய்தாலே போதுமானது. அதை விடுத்து, இது பொன்ற திட்டங்களால் மக்களின் பணம்தான் வீணாக செலவாகும்.

இதில் விவசாய நிலம், விளை நிலங்களை, குடியிருப்பு ஆகியவற்றை திட்டத்திற்காக கையகப்படுத்தும்போது மக்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கும். அதே போன்று, விலை மதிப்பு இல்லாத இயற்கை வளங்களும் அழியும். அதனால், இந்த வழக்கில் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்து, திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

Related Stories: