9 மாதங்களுக்குப்பின் துவங்கியது குமுளிக்கு பஸ் போக்குவரத்து: பொதுமக்கள் மகிழ்ச்சி

கம்பம்: கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் குமுளி மலைச்சாலையில் மராமத்து பணிக்காக, 9 மாதங்களாக நிறுத்திவைக்கப் பட்டிருந்த பஸ் போக்குவரத்து நேற்று முதல் மீண்டும் தொடங்கியது. கொரோனோ தடுப்பு நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகளின் உத்தரவால் கடந்த மார்ச் மாதம் மாநில எல்லைகள் மூடப்பட்டன. இதனால் எல்லைப்பகுதியான குமுளி, மற்றும் கம்பம் மெட்டு வழியாக கட்டப்பனை, நெடுங்கண்டம் போன்ற கேரளப் பகுதிக்குச் சென்ற தமிழக அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டன. பின் ஒருசில மாதங்களுக்கு முன் அண்டை மாநிலமான கேரளாவுக்குச் செல்ல  இ-பாஸ் முறை நடைமுறைக்கு வந்தது. இதனால் ஏலத்தோட்ட தொழிலாளர்களும், விவசாயிகளும் பாஸ் பெற்று டூவீலர் மற்றும் கார், ஜீப்புகளில் கேரளா சென்று வந்தனர்.

கடந்த டிசம்பர் முதல் தேனி மாவட்டத்தின் தமிழக கேரள எலைப்பகுதியான குமுளி, சின்னாறு, போடிமெட்டு, கம்பம் மெட்டு வழியாக கேரளாவுக்கு இ- பாஸின்றி வாகனப்போக்குவரத்துக்கு கேரளா அனுமதியளித்தது. ஆனால், போக்குவரத்துக்கு தடை நீங்கியும், எல்லைப்பகுதிகளான குமுளி, கம்பம்மெட்டு பகுதிக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் அன்றாட கூலித்தொழிலாளர்களும், விவசாய தொழிலாளர்களும் டூவீலர்களிலும், ஆட்டோவிற்கு அதிக கட்டணம் கொடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் கடந்த டிச.24ம் தேதி முதல் குமுளி மலைச்சாலையில் சிறு சிறு பாலங்கள் மற்றும் மராமத்து பணிக்காக  ஜன.5ம் தேதி வரை குமுளி சாலை தற்காலிகமாக மூடப்பட்டது. இந்நிலையில் குமுளி மலைச்சாலையில் மராமத்து பணிகள் முடிவடைந்ததால் நேற்று முதல் பஸ்களை இயக்க தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் அனுமதி வழங்கினார்.

இதையடுத்து நேற்று  காலை எட்டு மணி முதல் கம்பத்திலிருந்து குமுளிக்கு நகர பஸ்கள் இயக்கப்பட்டன. இதையடுத்து புறநகர பஸ்களும் இயக்கப்பட்டன. பல மாததங்களுக்குப்பின் எல்லைப்பகுதியான குமுளிக்கு பஸ்கள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் திண்டுக்கல் மண்டல பொதுமேலாளர் கணேசன் கூறுகையில், ``குமுளி மலைச்சாலையில் சாலைப்பணிகள் முடிவடைந்தால் நேற்று முதல் தமிழக எல்லைப்பகுதியான  குமுளிக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. பொதுமக்களின் வசதிக்காக தொடர்ச்சியாக குமுளிக்கு பஸ்கள் இயக்குவது குறித்து கிளை மேலாளர்களுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories: