ஜோ பைடன் வெற்றிக்கு எதிராக டிரம்ப் ஆதரவாளர்களின் செயல்பாடு நாட்டுக்கே அவமானம்!: அமெரிக்க நாடாளுமன்றம் முற்றுகைக்கு ஒபாமா கண்டனம்..!!

வாஷிங்டன்: ஜோ பைடன் வெற்றிக்கு எதிராக நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை போராட்டம் நாட்டிற்கே அவமானம் என்று முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயகப்படி நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து எவ்விதமான ஆதாரமும் இன்றி அதிபர் டிரம்ப்பும் அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர் என தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தை டிரம்ப் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு போராடுவது என்பது எதிர்பார்த்த ஒன்று தான் என்றும், போராட்டத்தில் எவ்வித ஆச்சர்யமும் கிடையாது என்றும் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் தேர்தல் முடிவுகள் குறித்து கடந்த 2 மாதமாகவே டிரம்ப்பின் குடியரசு கட்சியும், ஆதரவு மீடியாக்களும் அவரது ஆதரவாளர்களுக்கு உண்மையை எடுத்துரைக்கவில்லை என்றும் ஒபாமா குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றம் மீதான தற்போதைய முற்றுகை போராட்டம் நிச்சயம் வரலாற்றில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேபோல்  ஜோ பைடன், போரீஸ் ஜான்சன் உள்ளிட்ட தலைவர்களும் டிரம்ப் ஆதரவாளர்களின் முற்றுகை போராட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆதரவாளர்கள் மூலம் டொனால்ட் டிரம்ப் வன்முறையை தூண்டிவிட்டதாக தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த நவம்பர் 3ம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், வெற்றிபெற்றார். வரும் 20ம் தேதி ஜோ பைடன் புதிய அதிபராக பதவியேற்கவுள்ளார். தொடர்ந்து, அதிபர் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: