யரகோள் அணை அமைக்கும் பணி முடிந்த பின் திறப்பு விழா நடத்த வேண்டும்: எம்எல்ஏ சீனிவாசகவுடா வலியுறுத்தல்

பங்காருபேட்டை: மாநில அரசின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள யரகோள் அணை கட்டும் பணி முழுமையாக முடித்தபின் திறப்பு விழா நடத்த வேண்டும் என்று மாநில அரசுக்கு கோலார் தொகுதி எம்எல்ஏ சீனிவாசகவுடா வலியுறுத்தினார்.

கோலார் மாவட்டம், பங்காருபேட்டை தாலுகாவில் உள்ள யரகோள் கிராமத்தில் ரூ.340 கோடி செலவில் 0.5 டிஎம்சி தண்ணீர் சேமிக்கும் அணை கட்டும் திட்டம் மாநில முதல்வராக எச்.டி.குமாரசாமி இருந்த காலத்தில் தொடங்கப்பட்டது. பங்காருபேட்டை, மாலூர், கோலார் ஆகிய மூன்று நகரங்கள் மற்றும் 143 கிராமங்களுக்கு இத்திட்டத்தின் மூலம் நீர்ப்பாசன வசதி ஏற்படுத்தும் நோக்கத்தில் தொடங்கப்பட்டது. யரகோள் திட்டத்தில் தங்கவயல் தாலுகாவையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் உள்ளது.

இந்நிலையில், அணை கட்டும் பணி 90 சதவீதம் முடிந்துள்ளது. நீர் ஏற்றம் செய்ய வசதியாக பம்புசெட் பொருத்துவது, கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டுவரும் பணி உள்பட சில பணிகள் மட்டும் பாக்கியுள்ளது. இதனிடையில் யர்கோள் திட்டம் முழுமையாக இன்னும் முடிக்காத நிலையில், இம்மாதம் இறுதியில் அணை திறப்பு விழா நடத்த மக்களவை உறுப்பினர் முனிசாமி கொடுத்துவரும் அழுத்தம் காரணமாக மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் திறப்பு விழாவில் முதல்வர் எடியூரப்பா உள்பட மாநில அமைச்சர்கள் பங்கேற்பதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில், கோலார் தொகுதி எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான சீனிவாசகவுடா, மேலவை உறுப்பினர் கோவிந்தராஜு உள்பட ஊரக, நகர உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் நேற்று யர்கோள் அணை அமைக்கும் திட்டத்தை நேரில் சென்று பார்வையிட்டனர். அதன்பின் செய்தியாளர்களிடம் சீனிவாசகவுடா கூறும்போது, ``கோலார் மாவட்டத்தில் மூன்று தாலுகாக்களில் நிலவும் நீர் பற்றாகுறை போக்க யரகோள் திட்டத்தை எச்.டி.குமாரசாமி கொண்டு வந்தார். இத்திட்டம் ஆமை வேகத்தில் செயல்பட்டு வருகிறது. 90 சதவீதம் பணிகள் மட்டுமே முடிந்துள்ள நிலையில், இம்மாதம் திறப்பு விழா நடத்தவது சரியல்ல. பணி முடிந்தபின் திறப்பு விழா நடத்தினால் மட்டுமே திட்டத்தின் நோக்கம் பூர்த்தியாகும்’’ என்றார். அணை கட்டும் பணி 90 சதவீதம் முடிந்துள்ளது. நீர் ஏற்றம் செய்ய வசதியாக பம்புசெட் பொருத்துவது, கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டுவரும் பணி உள்பட சில பணிகள் மட்டும் பாக்கியுள்ளது.

Related Stories: