எப்போது அம்பு விடவேண்டும் என தெரியும் யாருக்கும் அச்சப்பட மாட்டேன்: பாஜ எம்எல்ஏ யத்னால் பரபரப்பு பேட்டி

பெங்களூரு: எப்போது அம்பு விட வேண்டும் எப்போது மவுனமாக இருக்க வேண்டும் என்று எனக்கு தெரியும். நான் எதற்கும் அச்சம் கொள்பவன் கிடையாது என்று பா.ஜ. எம்.எல்.ஏ. பசனகவுடாபாட்டீல் யத்னால் தெரிவித்தார். பெங்களூரு விதானசவுதா எதிரே செய்தியாளர்களிடம் யத்னால் கூறியதாவது, ``முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடத்த கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தின் போது நான் தெரிவித்த கருத்தால் முதல்வருக்கு வருத்தம் ஏற்பட்டதா இல்லையா என்று எனக்கு தெரியாது. ஆனால் துணை முதல்வர், அமைச்சர் பதவிக்கு திடீர் என்று வர வேண்டும் என்று நினைத்தவருக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளது என்று மறைமுகமாக ரேணுகாச்சார்யாவுக்கு பதில் அளித்தார்.

எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஒருவரை தவிர மற்றவர்கள் யாரும் பிரச்னை செய்யவில்லை என்று துணை முதல்வர் கோவிந்த்கார்ஜோள் தெரிவித்துள்ளார் அதில் உண்மையுள்ளது. எனக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று முதல்வர் வீட்டுக்கு நான் எப்போதும் சென்றது கிடையாது. மக்களின் கருத்துக்களை எடுத்து சொல்லும் வேலை செய்து வருகிறேன். நான் வடகர்நாடக மாவட்டத்தை சேர்ந்தவன் என்பதால், எதையும் தைரியமாக தெரிவித்து வருகிறேன். அதே போல் வடகர்நாடக மாவட்ட வளர்ச்சி குறித்து பேசி வருகிறேன். அரசு தவறு செய்ததால் அதை எச்சரித்தேன். அது கட்சி விரோத செயல் கிடையாது.

வளர்ச்சி குறித்து என்னுடைய குரல் இருக்கும் அதை யாராலும் நிறுத்த முடியாது. எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் நான் பேசும் போது யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஒருவர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்படி என்றால் நான் பேசியது உண்மை என்று மற்ற எம்.எல்.ஏக்கள் புரிந்துக்கொண்டுள்ளனர். என் மீது ஒழுங்கு குழு கமிட்டிக்கு புகார் எதுவும் அனுப்பி வைக்கவில்லை. இவைகள் தவறான தகவல்கள். எப்போது அம்பு விட வேண்டும் எப்போது மவுனமாக இருக்க வேண்டும் என்று எனக்கு தெரியும். நான் எதற்கும் அச்சம் கொள்பவன் கிடையாது என்றார்’’.

Related Stories: