வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள பாஜ எம்எல்ஏக்கள் தொகுதிக்கு தலா ரூ.25 கோடி ஒதுக்கீடு: முதல்வர் எடியூரப்பா முடிவு

பெங்களூரு: கர்நாடகாவில் பாஜ எம்எல்ஏக்கள் இருக்கும் தொகுதிகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்காக தலா ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்ய முதல்வர் எடியூரப்பா முடிவு செய்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய இரு நாட்கள் கர்நாடகம் வருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் அமித்ஷா, அமைச்சரவை விஸ்தரிப்பு, பாஜ ஆட்சியின் செயல்பாடுகள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். கடந்த ஒரு மாதமாக பாஜ ஆட்சி மீது மட்டுமில்லாமல் முதல்வர் எடியூரப்பா மீதும் பல்வேறு விமர்சனங்களை விஜயபுரா சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் ஆர்.யத்னால் கூறி வருகிறார். யத்னாலின் கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் உள்ளது. இதனால் ஆட்சி தலைமை மாற்றம் ஏற்படுமோ என்ற பரபரப்பும் நிலவுகிறது.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை தொடங்கி இரண்டு நாட்கள் கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பல எம்எல்ஏக்கள் முதல்வர் மீது மட்டுமில்லாமல் அமைச்சர்கள் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். கடந்த பத்து மாதங்களாக தொகுதியில் எந்த வளர்ச்சி பணிகளும் நடக்காமல் முடங்கியுள்ளதால், மக்கள் முன் தலைகாட்ட முடியாத சூழ்நிலை நிலவுகிறது. நடந்து முடிந்த கிராம பஞ்சாயத்து தேர்தலில் நமது கட்சி ஆதரவில் போட்டியிட்டவர்கள் முழு அளவில் வெற்றி பெறாமல் போனதற்கு தொகுதியில் எந்த வளர்ச்சி பணிகளும் நடக்காமல் முடங்கியதும் காரணம் என்று எம்எல்ஏக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தெரியவருகிறது. முதல்வர் மீது அதிருப்தி வெளிப்படுத்திய எம்எல்ஏக்களை துணைமுதல்வர்கள் கோவிந்தகார்ஜோள், லட்சுமண்சவதி, அஷ்வத் நாராயண், அமைச்சர்கள் பி.ஸ்ரீராமுலு, வீ.சோமண்ணா, எஸ்.டி.சோமசேகர், சசிகலா ஜோள்ளே உள்பட பலர் சமாதானம் செய்தனர்.

அதை தொடர்ந்து முதல்வர் எடியூரப்பா பேசும்போது, உங்கள் உள்ளங்களில் இருக்கும் வலியை நான் உணர்ந்துள்ளேன். நாம் ஆட்சி பொறுப்பேற்ற ஓரிரு நாட்களில் வடகர்நாடக பகுதி உள்பட மாநிலத்தின் 18 மாவட்டங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பணிகள் மேற்கொண்டு வந்த நிலையில், கடந்தாண்டு பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்தபோது, பல்வேறு திட்டங்கள் அறிவித்தேன். நமது துரதிர்ஷ்டம் மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவல் வந்ததால், நம்மால் நினைத்ததை சாதிக்க முடியாமல் போனது. கொரோனா ஊரடங்கு, கடந்தாண்டும் வெள்ள பெருக்கு என சோதனைகள் தொடர்ந்தது. இதனால் வளர்ச்சி பணிகள் மட்டுமில்லாமல், உங்களுடனும் (எம்எல்ஏக்கள்) சந்தித்து பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. வரும் 2021-22ம் நிதி பட்ஜெட்டில் ஒவ்வொரு எம்எல்ஏக்களின் தொகுதியிலும் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்த முன்னுரிமை கொடுக்கப்படும் என்று உறுதியளித்து சமாதானம் செய்தாக தெரியவருகிறது.

இந்நிலையில் நடந்து முடிந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் வெளிப்படுத்திய அதிருப்தியை வரும் 15ம் தேதி அமித்ஷா வரும்போதும் வெளிப்படுத்தினால் நெருக்கடியாகிவிடும் என்று முடிவு செய்துள்ள முதல்வர் எடியூரப்பா, கட்சி எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றுள்ள தொகுதிகளில் பல்வேறு துறைகள் மூலம் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள தலா ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளதுடன் வாரத்திற்கு இரு நாட்கள் கட்சி எம்எல்ஏக்களை சந்தித்து அமைச்சர்கள் பேச வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரியவருகிறது. இதை துணைமுதல்வர் கோவிந்தகார்ஜோளும் உறுதி செய்துள்ளார். எம்எல்ஏக்கள் கூட்டத்தில் வெளிப்படுத்திய அதிருப்தியை வரும் 15ம் தேதி அமித்ஷா வரும்போதும் வெளிப்படுத்தினால் நெருக்கடியாகி விடும் என்று முதல்வர் எடியூரப்பா யோசிக்கிறார்.

Related Stories: