கேரளாவில் வேகமாக பரவும் பறவை காய்ச்சல் தமிழக எல்லையில் தீவிர வாகன சோதனை-கால்நடைதுறை அதிகாரிகள் நடவடிக்கை

செங்கோட்டை :  கேரளாவில் கொ ரோனா பாதிப்பு குறையாத நிலையில் கோட்டயம், ஆலப்புழா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பறவை காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இங்குள்ள பறவை  பண்ணைகளில் ஆயிரக்கணக்கான பறவைகள் திடீரென ஏற்பட்ட நோய்த் தாக்குதலால் அடுத்தடுத்து இறந்தன.

 இவ்வாறு இறந்த பறவைகளின் மாதிரிகளை  கால்நடைத்துறை அதிகாரிகள் சேகரித்து போபாலில் செயல்படும் தேசிய உயர் பாதுகாப்பு விலங்குகள் நோய் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு நடந்த ஆய்வில், இறந்த பறவைகள் அனைத்தும் பறவை காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தது உறுதி செய்யப்பட்டது. குறிப்பாக ஒருவித பாக்டீரியாக்கள் மூலம் எச் 5, என் 8 வகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இத்தகைய வைரஸ் மூலம் மனிதர்களுக்கும் நோய் பரவ வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டது. இதையடுத்து இப்பண்ணைகளில் உள்ள அனைத்துப் பறவைகளையும் அழித்து விட அறிவுறுத்தப்பட்டது.

 இதையடுத்து கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் உள்ள பறவை பண்ணைகளில் பராமரிக்கப்பட்டு வந்த பறவைகளை அழிக்கப்பட்டன. குட்டநாட்டில் 17 ஆயிரம் வாத்துகள், கோட்டயத்தில் 8 ஆயிரம் பறவைகள் உள்ளிட்ட மொத்தம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாத்து, கோழிகள் குழி தோண்டி புதைக்கப்பட்டன.

 இதனிடையே கேரளாவில் வேகமாக பரவும் பறவை காய்ச்சலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கேரள எல்லை மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களுக்கு மாவட்ட எல்லையில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மேலும் அங்கிருந்து கோழி, வாத்து போன்ற பறவைகளை ஏற்றி வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.

 இதையொட்டி தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி அருகே முகாமிட்டுள்ள தமிழக கால்நடை துறை அதிகாரிகள், கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில்  தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். பறவையினங்கள், வாத்து, கோழி, முட்டை, கோழித் தீவனங்கள் போன்றவற்றை ஏற்றிவரும் வாகனங்களை  கண்டறிந்து திருப்பியனுப்புகின்றனர்.

மேலும் காய்கறி உள்ளிட்ட உணவுப்பொருட்களை ஏற்றி வரும் அனைத்து கனரக, இலகுரக வாகனங்களையும் தடுத்து நிறுத்தி தீவிர சோதனை மேற்கொள்கின்றனர். அத்துடன் வாகனங்களின் டயர்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பறவை காய்ச்சல் நோய் கிருமிகளை அழிக்கும் வகையில், கிருமி நாசினி (க்ளோரின்-டை-ஆக்ஸைடு )மருந்தினை தெளித்து வருகின்றனர்.

தனியார் பண்ணைகளில் ஆய்வு

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கால்நடை பராமரிப்பு, பொது சுகாதாரம், பேரிடர் மேலாண்மை துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், அனைத்துத்துறை  அலுவலர்கள் ஒருங்கிணைந்து தடுப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். இப்பணிகளை தென்காசி கலெக்டர்  சமீரன் தலைமையில் கால்நடை பராமரிப்புத்து றை இணை இயக்குநர் ஹாலித், பொது  சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் சிவலிங்கம், பேரிடர் மேலாண்மை  தாசில்தார் சண்முகம் ஒருங்கிணைத்து  முழு வீச்சில் மேற்கொண்டுள்ளனர்.

கேரளாவில் இருந்து லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களில் கோழி இறைச்சி கழிவு உள்ளிட்டவற்றை கொண்டு வந்து தென்காசி மாவட்டத்தில் கேரள எல்லை பகுதிகளையொட்டியுள்ள நீர்நிலைகள், தரிசு நிலங்கள், விளைநிலங்கள், ஓடைகள் ஆகியவற்றில் இரவில் கொட்டிச் செல்வதை தடுக்கும் நடைமுறையையும் தீவிரப்படுத்தியுள்ளனர். இதேபோல் தென்காசி மாவட்டத்தில் தனியார் சார்பில் செயல்படும் சுமார் 223 பண்ணைகளில் கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளதோடு வழக்கத்திற்கு மாறாக கால்நடைகள் இறந்துள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: