வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளையொட்டி விளாத்திகுளம் அருகே மாட்டுவண்டி போட்டி-இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகள்

விளாத்திகுளம் : வீரபாண்டிய கட்டபொம்மனின் 262வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு விளாத்திகுளம் அருகே சிங்கிலிபட்டி- கல்குமி கிராமத்தில் மாட்டுவண்டி போட்டி நடந்தது. பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக்குழு தலைவர் முருகபூபதி தலைமை வகித்தார். ஆற்றங்கரை (கல்குமி) பஞ். தலைவர் சீத்தாராமன், என்.வேடபட்டி (சிங்கிலிபட்டி) பஞ். தலைவர் செல்வகுமார் முன்னிலை வகித்தனர்.

தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகள் போட்டியில் பங்கேற்றன. பூஞ்சிட்டு, சின்ன மாடு, நடுமாடு ஆகிய 3 பிரிவுகளில் சிங்கிலிபட்டி- விளாத்திகுளம் சாலையில் மாட்டுவண்டி போட்டி நடத்தப்பட்டது.

5 கிமீ தொலைவு கொண்ட பூஞ்சிட்டு மாட்டு வண்டி  போட்டியை சிங்கிலிபட்டி தர்மகர்த்தா முத்துக்கண்ணன், கல்குமி தர்மகர்த்தா சேதுராஜ், கல்குமி இளைஞரணி தலைவர் பாலமுருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில்  முதல் பரிசு ரூ.7ஆயிரத்தை சிங்கிலிபட்டியை சேர்ந்த விக்கிரபாண்டி அய்யனார் மாட்டுவண்டியும், 2ம் பரிசு ரூ.6 ஆயிரத்தை என்.வேடபட்டி கருப்பாமி மாட்டு வண்டியும், 3ம் பரிசு ரூ.5 ஆயிரத்தை பூலாங்கால் கிராமத்தை சேர்ந்த இமாந்த் மாட்டு வண்டியும் பெற்றன.

6 கிமீ தொலைவு கொண்ட சின்னமாட்டு வண்டி போட்டியை விளாத்திகுளம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தொடங்கி வைத்தார். இதில், முதல் பரிசு ரூ.9 ஆயிரத்தை துவரந்தையை சேர்ந்த பொய்சொல்லான் மாட்டுவண்டியும், 2ம் பரிசு ரூ.8 ஆயிரத்தை சிங்கிலிபட்டி ஆனந்த் மாட்டு வண்டியும், 3ம்  பரிசு ரூ.7 ஆயிரத்தை சிங்கிலிபட்டி முருகபாண்டி மாட்டுவண்டியும் பெற்றன.

8 கிமீ தொலைவு கொண்ட நடுமாட்டு வண்டி போட்டியை எட்டயபுரம் இன்ஸ்பெக்டர் கலா தொடங்கி வைத்தார். போட்டியில் முதல் பரிசு ரூ.12 ஆயிரத்தை சிங்கிலிபட்டி முருகபாண்டி மாட்டு வண்டியும், 2ம் பரிசு ரூ.11 ஆயிரத்தை மதுரை அவனியாபுரம் மோகன் மாட்டுவண்டியும், 3ம் பரிசு ரூ.10

ஆயிரத்தை சித்தர் சங்குசாமி மாட்டுவண்டியும் பெற்றன.

Related Stories: