ஒன்றாக இருப்பவர்கள் விரைவில் உடைவார்கள் ஊழல் செய்வதற்காகவே 8 வழிச்சாலை திட்டம்: தர்மபுரியில் கமல்ஹாசன் பேச்சு

தர்மபுரி: அதிமுகவில் இப்போது ஒன்றாக இருப்பவர்கள், விரைவில் உடைவார்கள்; உறவுகள் மாறும், ஊழல் செய்வதற்காகவே 8 வழிச்சாலை திட்டத்தை தொடங்க உள்ளனர் என்று தர்மபுரியில் நடந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசினார். தர்மபுரி மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள், பெண்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோருடன் தர்மபுரியில் கலந்துரையாடினார். பின்னர் கமல்ஹாசன் பேசியதாவது: அனைத்தையும் மிஞ்சும் வகையில் எனக்கு ஒரு சமூக ஊழியன் என்ற பட்டம் கிடைத்துள்ளது. நடிகன், காதல்மன்னன், நாயகன், உலக நாயகன் என அனைத்து பட்டங்களையுமே துறக்கிறேன், மக்கள் சேவகன், சமூக ஊழியன் என்ற பட்டத்தை ஏற்றுக்கொள்கிறேன்.

1989ம் ஆண்டு மகளிர் சுயஉதவிக்குழு முதன் முறையாக தர்மபுரியில்தான் தொடங்கப்பட்டது. அரை நூற்றாண்டுகாலமாக வறுமைக் கோட்டை பற்றி பேசுகின்றனர். நாங்கள் மக்களை செழுமைகோட்டிற்கு மேலே வைத்திருப்போம். கீழே இறங்க விடமாட்டோம். நான் தலைவன் கிடையாது. மக்களை தலைவர்களாக  பார்க்கிறேன். சொர்க்கத்தை நான் நம்புபவன் அல்ல. ஆனால் வாழும் இடம் சுகாதாரமாக இருந்தால், அதையே சொர்க்கமாக நினைக்கிறேன். 5 வயதிலிருந்து சம்பாதித்து வருகிறேன். வசதியாக இருக்கிறேன். நான் மட்டும் நல்லபடியாய் இருந்தால் போதாது, தமிழக மக்களும் நல்லபடியாய் இருக்க வேண்டும்.

எட்டு வழிச்சாலை தற்போது தேவையில்லை. ஊழல் செய்வதற்காகவே தொடங்க உள்ளனர். எல்லா துறைகளிலும் பல வழிகளில் ஊழல் செய்பவர்கள், 8 வழிச்சாலையிலும் ஊழல் செய்ய துடிக்கின்றனர். எம்ஜிஆரின் மடியில் வளர்ந்தவன் நான். அவரை அண்ணனாக, தலைவனாக, தகப்பனாக எப்படி வேண்டுமானாலும் சொந்தம் கொண்டாடலாம். ஆனால், எம்ஜிஆரின் பெயரை பற்றி கூற இவர்களுக்கு உரிமையில்லை. இரட்டை இலையை ஆலமரமாக்க நினைத்தார் எம்ஜிஆர். அவர் போட்ட இலையில் இன்று இருவர் அமர்ந்துள்ளனர். தற்போது ஒன்றாக இருக்கிறார்கள், விரைவில் கூட்டுகள் உடையும், இவர்களின் உறவுகள் மாறும். இவர்கள் அடித்துக்கொள்வதில் நாற்காலிகள் உடையும். அரசு என்றால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். சேவைகள் மக்களை தேடி வரவேண்டும். நாளை நிச்சயம் நமதே. இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

Related Stories: