நாடாளுமன்றம் 29ல் கூடுகிறது மத்திய பட்ஜெட் பிப்.1ல் தாக்கல்: மத்திய அமைச்சரவை பரிந்துரை

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை வரும் 29ம் தேதி கூட்டவும், பிப்ரவரி 1ம் தேதி பொது பட்ஜெட்டை தாக்கல் செய்யவும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் நாடாளுமன்ற மழைக்கால கடந்த செப்டம்பர் 14ல் தொடங்கி, 23ம் தேதி வரை நடந்தது. இதனால், பல எம்பி.க்கள், நாடாளுமன்ற ஊழியர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், திட்டமிட்டதற்கு முன்கூட்டியே இத்தொடர் முடித்து வைக்கப்பட்டது. இதுபோன்ற சூழலை தவிர்க்க கடந்த ஆண்டு இறுதியில் நடக்க வேண்டிய குளிர்காலக் கூட்டத் தொடரை மத்திய அரசு ரத்து செய்தது.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். எனவே, பட்ஜெட் கூட்டத் தொடர் நடத்துவது குறித்து நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு நேற்று கூடியது. இதில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை வரும் 29ம் தேதி தொடங்கி, வரும் ஏப்ரல் 8ம் தேதி வரை நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 1-ம் தேதி பொது பட்ஜெட்டைத் தாக்கல் செய்யலாம் என்றும், முதல்கட்ட கூட்டத் தொடரை ஜனவரி 29ம் தேதி தொடங்கி பிப்ரவரி 15ம் தேதி வரையிலும்,  2ம் கட்ட கூட்டத் தொடரை மார்ச் 8ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரையிலும் நடத்தலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றி தொடரை தொடங்கி வைக்க உள்ளார்.

Related Stories: