நள்ளிரவில் நடிகை வீட்டில் நுழைந்த வாலிபர்: பரபரப்பு தகவல்கள்

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் ‘ஞான் ஸ்டீவ் லோப்பஸ்’ என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர் அஹானா கிருஷ்ணா. ‘லூக்கா’, ‘18ம் படி’ உள்பட பல படங்களில் நடித்து உள்ளார். அவரது தந்தை பிரபல நடிகர் கிருஷ்ணகுமார். மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘தெய்வத்திருமகள்’, ‘முகமூடி’, ‘சத்யம்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவரது வீடு திருவனந்தபுரம் மருதன்குழியில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு நள்ளிரவில் ஒரு வாலிபர், நடிகை அஹானா கிருஷ்ணாவின் வீட்டு கேட்டை தாண்டி உள்ளே குதித்தார்.

பின்னர் வேகமாக வீட்டுக்குள் நுழைந்தார். இதை பார்த்த நடிகர் கிருஷ்ணகுமார் வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரித்தார். அப்போது நடிகை அஹானா கிருஷ்ணாவை பார்க்க வேண்டும் என்று கூறினார். இரவு நேரம் ஆகிவிட்டதால் அனுமதிக்க முடியாது என்று  கிருஷ்ணகுமார் மறுத்தார். இதையடுத்து வாலிபர் ரகளையில் ஈடுபட்டார்.உடனே கிருஷ்ணகுமார் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து சென்று வாலிபரை கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் மலப்புரத்தை சேர்ந்த பசில் உல் அக்பர் (27) என தெரியவந்தது. முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து போலீசார் பசில் உல் அக்பரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் தீவிரவாதிகள் பங்கு இருக்கலாம் என்று கேரள பாஜ தலைவர் சுரேந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘நடிகர் கிருஷ்ணகுமார் பிரதமர் மோடி, பாஜவுக்கு ஆதரவாக இருக்கிறார். ஏற்கனவே அவருக்கு சமூக வலைத்தளங்களில் மிரட்டல்கள் வந்துள்ளன. தற்போது இரவு நேரத்தில் வாலிபர் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இதில் தீவிரவாதிகளுக்கு பங்கு இருக்கலாம். எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: