ஏழை மக்களுக்கு சுமையாக இருக்கும் வரி உயர்வை திரும்ப பெற வேண்டும்: முன்னாள் அமைச்சர் ராமலிங்கரெட்டி வலியுறுத்தல்

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் மக்களை மிகவும் பாதிக்கும் வகையில் வரி உயர்வை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இது ஏழை எளிய, மக்களுக்கு சுமையை அதிகரிக்கும் என்பதால் உடனே திரும்ப பெற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ராமலிங்கரெட்டி வலியுறுத்தினார். பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் நேற்று முற்றுகை போராட்டம் நடந்தது. மாஜி அமைச்சர் ராமலிங்கரெட்டி தலைமையில் நடந்த போராட்டத்தில் மாஜி மேயர் மஞ்சுநாத்ரெட்டி மற்றும் மாஜி கவுன்சிலர்கள் சத்யநாராயண் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான  அக்கட்சியின் கலந்து கொண்டனர். திறந்த வேனில்  சென்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மாநகராட்சியை முற்றுகையிடுவதற்கு முயன்றபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். முன்னதாக மாஜி அமைச்சர் ராமலிங்கரெட்டி கூறியதாவது: பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் மக்களுக்கு மிகவும் பாதிக்கும் வகையில் வரி உயர்வை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

பெங்களூரு மாநகரில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் மிகவும் குறைந்த பரப்பில் அதாவது 600 சதுர அடியில் வீடு கட்டுவதற்கான அனுமதி பெறுவதற்கு ரூ.2 லட்சம் வரி செலுத்த வேண்டும் என்பது மிகவும் தவறாகும். ஏழை எளிய மக்களுக்கு இது  மிகப்பெரிய தொகை என்பதால் உடனடியாக இந்த  உத்தரவை வாபஸ் பெறவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மத்தியில் பாஜ ஆட்சி அமைந்த பிறகு மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை. அதே நேரம் ஏழை எளிய மக்கள் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டனர். ரூ.500 மற்றும் ஆயிரம் ரூபாய் தடை செய்யப்பட்டபோது உயிரிழந்தோருக்கு இதுவரை நிவாரணம் வழங்கவில்லை. இந்நிலையில் ஜிஎஸ்டி  வரி விதிப்பு கொண்டு வந்து தொழில் துறையின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. அதே போல் மாநிலத்தில் எடியூரப்பா தலைமையிலான பாஜ ஆட்சியின் போது வளர்ச்சி திட்டங்களுக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மழையின் காரணமாக வீடுவாசல்களை இழந்த நபர்களுக்கு இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் மக்களின் வரிப்பணம் கொள்ளை அடிக்கப்பட்டதுதான் பாஜவின் சாதனை ஆகும். இதுதவிர உண்மையில் வேறு எந்த திட்டமும் அமல்படுத்தப்படவில்லை.  பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்தில் பாஜ இருந்த போது மக்களின் வரிப்பணம் கணக்கில் இல்லாத அளவில் கொள்ளை அடிக்கப்பட்டன. அதன் காரணமாக மாநகராட்சி நிர்வாகம் திவால் ஆகும் நிலை உருவானது. இதைத்தொடர்ந்து மாநகராட்சிக்கு சொந்தமாக மேயோஹால் உள்ளிட்ட 11 பிரசித்தி பெற்ற  சொத்துகள் அடமானம் வைத்து கடன் பெறப்பட்டது.  பாஜவினர் அடமானம் வைத்த சொத்துக்களை காங்கிரஸ் கட்சி நிர்வாகத்தின் போது மீட்டு எடுத்தோம். மஞ்சுநாத்ரெட்டி மேயராக இருந்த போது  அடமானம் வைக்கப்பட்டிருந்த சொத்துகள் மீட்கப்பட்டது.

மாநிலத்தில் பாஜ ஆட்சியில் இருந்த போது  மாநகராட்சி நிர்வாகத்திலும் பாஜ இருந்தது. குப்பை கழிவு நிர்வாகத்தை முறையாக செயல்படுத்த வில்லை என்பதால் கார்டன் சிட்டி, மெட்ரோ சிட்டி, சிலிகான் சிட்டி என்றெல்லாம் அழைக்கப்பட்ட பெங்களூரு  மாநகரம் கார்பேஜ் சிட்டி என்றழைக்கப்படும் நிலைக்கு மாறியது. காங்கிரஸ் நிர்வாகத்தின் போது இந்த  பிரச்னைக்கு நாங்கள் சரி செய்தோம். இப்போது மறுபடியும் பாஜ ஆட்சியின் போது பெங்களூருவில் ரோடுகள் குண்டும் குழியுமாக மாறிவிட்டன. தெருவிளக்குகள் ஒளிர்வதில்லை. அத்துடன் குப்பைகள் ஆங்காங்கே அப்படியே தேங்கி கிடக்கின்றன. இதுதான் பாஜவின்  சாதனை ஆகும்’’ இவ்வாறு மாஜி அமைச்சர் ராமலிங்கரெட்டி கூறினார்.

Related Stories: