வருமான வரித்துறை திடீர் நடவடிக்கை: பினாமி சொத்து தொடர்பாக ராபர்ட் வதேராவிடம் விசாரணை

புதுடெல்லி: பினாமி பெயரில் சொத்துக்கள் தொடர்பாக சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் வீட்டிற்கு சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மருமகனும், கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா மீது லண்டனில் சொத்து வாங்கியதில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்க துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் லண்டனில் பினாமி சொத்துக்கள் தொடர்பாக ராபர்ட் வதேராவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினார்கள்.  

ராபர்ட் வதேராவை விசாரணைக்காக அலுவலகம் வரும்படி வருமான வரித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் கொரோனோ கட்டுப்பாடுகளை சுட்டிக்காட்டி அவர் விசாரணைக்கு செல்லவில்லை. இந்நிலையில் டெல்லியில் சுக்தேவ் விகார் பகுதியில் உள்ள வதேரா வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் குழு நேற்று சென்றது. அங்கு பினாமி சொத்து பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் வதேராவின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டது. தன் மீதான குற்றச்சாட்டுக்களை வதேரா தொடர்ந்து மறுத்து வருகிறார். மேலும் வதேரா மீதான நடவடிக்கைகள் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு நடத்தப்படுவதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

சஞ்சய் ராவத் மனைவி ஆஜர்

மகாராஷ்டிராவில் பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி கடன் மோசடி குறித்து அமலாக்க துறை விசாரணை நடத்தி வருகின்றது. இந்த வங்கி கடன் மோசடியில் தொடர்புடைய நபரிடம் இருந்து சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் மனைவி வர்ஷா பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.  இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் வர்ஷாவிற்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இதனை தொடர்ந்து அமலாக்க துறை அதிகாரிகள் முன்னிலையில் வர்ஷா நேற்று ஆஜரானார். ஆனால் தனது மனைவி வர்ஷா மீதான குற்றச்சாட்டை எம்பி சஞ்சய் ராவத் மறுத்துள்ளார். விசாரணை ஏஜென்சிகள் பாஜ அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories: