உலகத்தின் கவனத்தை ஈர்க்க 26ல் டெல்லியில் டிராக்டர் பேரணி: விவசாய சங்கங்கள் அதிரடி முடிவு

புதுடெல்லி: சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த, போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்தி வரும் முற்றுகை போராட்டம் நேற்றும் தொடர்ந்தது. சட்டங்களை கைவிட வேண்டும் என விவசாய சங்கங்களும், திருத்தங்கள் மட்டுமே செய்ய முடியும் என மத்திய அரசும் கூறி வருவதால், இந்த போராட்டம் நீடிக்கிறது. இரு தினங்களுக்கு முன் நடந்த 6ம் கட்ட பேச்சுவார்த்தையில் பயிர் கழிவுகளை எரிப்பது உள்ளிட்ட 2 பிரச்னைகளில் மட்டுமே தீர்வு காணப்பட்டது. ஆனால், சட்டங்களை ரத்து செய்யும் முக்கிய கோரிக்கை இன்னும் நிலுவையில் இருப்பதால், நாளை 7ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில், சுமூக முடிவு காணவில்லை என்றால், போராட்டம் தீவிரமடையும் என்று விவசாயிகள் எச்சரித்துள்ளனர். தற்போது, அதற்கான ஆயத்தங்களில் விவசாய சங்கங்கள் ஈடுபட்டுள்ளன.

ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்துக்காக டெல்லி ராஜபாதை தயாராகி வருகிறது. இந்தாண்டு சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்கிறார். இந்த பரபரப்புக்கிடையில், அதே நாளில் டெல்லியில் டிராக்டர்கள் பேரணியை நடத்த விவசாயிகள் திட்டமிட்டு வருகின்றனர். இதன்மூலம், சர்வதேச அளவில் விவசாயிகள் போராட்டம் கவனம் பெறும் என விவசாய சங்க பிரதிநிதிகள் நேற்று தெரிவித்தனர். ‘விவசாயிகள் பேரணி’ என்ற பெயரில் இந்த டிராக்டர் பேரணி நடத்தப்படும்,’ என விவசாயிகள் சங்கத் தலைவர் தர்சன் பால் சிங் தெரிவித்துள்ளார்.

Related Stories: