கிடப்பில் வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்: எம்பி, எம்எல்ஏக்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்பு

ஆலந்தூர்: சென்னை புறநகர் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் திமுக ஆட்சியில் ரூ.417 கோடி செலவில் தொடங்கப்பட்ட வேளச்சேரி - பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் திட்டப் பணிகளை கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ள அதிமுக அரசை கண்டித்து திமுக சார்பில் ஆதம்பாக்கம் அம்பேத்கர் திடலில் நேற்று கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார்.  காஞ்சிபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், இதயவர்மன், திமுக தீர்மானக்குழு உறுப்பினர் மீ.அ.வைதிலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, ஆலந்தூர் தெற்கு பகுதி செயலாளர் என்.சந்திரன் வரவேற்றார்.

இதில், திமுக பொருளாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு எம்பி பேசியதாவது: வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் திமுக தலைவர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இந்த திட்டத்தை அதிமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டது. மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தையும் கிடப்பில் போட்டுள்ளனர். நீதிமன்றம் அனுமதி வழங்கியும் இந்த 2 திட்டங்களை கிடப்பில் போட்டுள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தால்தான் இந்த திட்டங்கள் நிறைவேறும்.

சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு வாக்களித்து ஸ்டாலினின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். அப்போது தான் மக்களுக்கான பணிகளை விரைந்து மேற்கொள்ள முடியும். இவ்வாறு அவர் பேசினார். திமுக அமைப்பு செயலாளர்  ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், ‘வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டத்திற்கு உயர் நீதிமன்றம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அனுமதி வழங்கியது. இருந்தபோதும் இந்த அதிமுக அரசு அதை கிடப்பில் போட்டுள்ளது. திமுக ஆட்சி வந்தவுடன் இந்த திட்டம் நிறைவேற்றப்படும்,’ என்றார்.

தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ பேசுகையில், ‘வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் 500 மீட்டர் அளவில் தான் முடியாமல் உள்ளது.  திமுக கொண்டு வந்த திட்டம் என்பதால் மட்டுமே   அதிமுக அரசு இதை கிடப்பில் போட்டுள்ளது,’ என்றார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் க.துரைசாமி, சா.விஸ்வநாதன், அன்புச்செழியன், கலைவாணி காமராஜ், எஸ்.சேகர், எம்.எஸ்.கே.இப்ராஹிம், பொதுக்குழு உறுப்பினர்கள் கீதா ஆனந்தன், ஆர்.டி.பூபாலன், தொண்டரணி மாவட்ட செயலாளர் கிரிஜா பெருமாள்,  கோல்டு பிரகாஷ், கன்டோன்மென்ட் பாபு, ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், வந்தேமாதரம், ஆலந்தூர் பகுதி நிர்வாகிகள், கே.ஆர்.ஜெகதீஸ்வரன், வேலவன், நடராஜன், முரளி கிருஷ்ணன் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: