போஸ்டர், பேனரில் பெயர் போடாததால் அதிமுகவினர் கோஷ்டி மோதல்: இருதரப்பினரும் போலீசில் புகார் :பெரம்பூர், தாம்பரத்தில் பரபரப்பு

சென்னை: பெரம்பூர், தாம்பரம் பகுதியில் போஸ்டர், பேனரில் பெயர் புறக்கணிப்பு தொடர்பாக அதிமுகவினர் கோஷ்டி மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கான டோக்கன் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பல இடங்களில் அதிமுகவினர் ரேஷன் கடை ஊழியர்களை மிரட்டி டோக்கன்கள் மொத்தமாக வாங்கிச்சென்று மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர் பெயர்களை பதிவு செய்து வீடு வீடாக வழங்கி வந்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது ரேஷன் கடைகள் அருகில் ரூ.2500 பொங்கல் பரிசு வழங்கிய முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து மாவட்ட செயலாளர்கள் பெயர்களை போட்டு அதிமுகவினர் பேனர்களை வைத்து வருகின்றனர். அதன்படி, பெரம்பூர் பழனி ஆண்டவர் கோயில் தெருவில் தமிழக முதல்வருக்கு நன்றி என பேனர் வைக்கப்பட்டு இருந்தது.

அதில், மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பெயர் இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பெயர் மற்றும் தொகுதி பொறுப்பாளர் ஜேசிடி பிரபாகரன் பெயர் இடம் பெற்றிருந்தது. இந்த பேனரை மாவட்ட செயலாளர் ராஜேஷ்க்கு எதிராக செயல்படும் வடசென்னை எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வெற்றிவேந்தன் மற்றும் பகுதி செயலாளர் ஜே.கே.ரமேஷ் உள்ளிட்டோர் வைத்திருந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தரப்பை சேர்ந்த பகுதி செயலாளர் இளங்கோ மற்றும் ரமேஷ் ஆகியோர் அமைச்சர் ஜெயக்குமார் பெயர் இல்லாமல் மாவட்ட செயலாளர் ராஜேஷின் பெயரை மட்டும் போட்டு ரேஷன் கடை அருகில் பேனர் வைத்தனர்.அப்போது, அமைச்சர் ஜெயக்குமார் பெயரை போட்டு வைத்த பேனரை ராஜேஷ் தரப்பினர் அகற்றியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வெற்றிவேந்தன் செம்பியம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் மாவட்ட செயலாளர் தரப்பை சேர்ந்த ரமேஷ் என்பவரும் செம்பியம்  காவல்  நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதனையடுத்து செம்பியம் இன்ஸ்பெக்டர் ராஜா இருதரப்பினரையும் 3 மணி நேரமாக சமாதானம் செய்தார். நீண்ட பஞ்சாயத்துக்கு பிறகு இரு தரப்பினரும் நாங்கள் இந்த பிரச்னையை தலைமை கழகத்தில் சொல்லி தீர்த்துக் கொள்கிறோம், என்று கூறி சென்றனர். செம்பியம் காவல் நிலையத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  ஏற்கனவே பெரம்பூர் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டபோது ஆர்.எஸ்.ராஜேஷ் 68 ஆயிரத்து 32 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமாரின் செயல்பாடே காரணம் என ராஜேஷ் தரப்பினர் குற்றம்சாட்டினர்.இந்நிலையில் மீண்டும் தேர்தல் வரும் நேரத்தில் அமைச்சர் ஜெயக்குமாருக்கும், மாவட்ட செயலாளர் ராஜேஷ்க்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், முன் அனுமதி பெறாமல் பேனர்கள் வைக்கக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவையும் அதிமுகவினர் காற்றில் பறக்கவிட்டது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

தாம்பரம்: தாம்பரம் அடுத்த செம்பாக்கம் நகராட்சியில் மினி கிளினிக் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர் வளர்மதி கலந்துகொண்டார். இதனை தொடர்ந்து, செம்பாக்கம் நகர, அதிமுக உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், கலந்து கொண்ட வளர்மதி, வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவினர் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கிவிட்டு சென்றார். இந்நிலையில், மினி கிளினிக் திறப்பு விழாவுக்கு அதிமுக சார்பில் வைக்கப்பட்ட போஸ்டரில் செம்பாக்கம் நகராட்சி முன்னாள் தலைவர் சாந்தகுமார் பெயர் இடம்பெறாததால் இதுகுறித்து, சாந்தகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் செம்பாக்கம் நகரச் செயலாளர் விஜயராகவன் தரப்பினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், இரு தரப்பினருக்குமிடையே கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது.

கடந்த டிசம்பர் 24ம் தேதி தாம்பரத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நினைவு நாளில் அதிமுகவினர் கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். மீண்டும் அதுபோல ஏற்பட்டு விடக் கூடாது என மூத்த நிர்வாகிகள் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, அங்கிருந்து கலைந்து சென்றனர். அப்போது, முன்னாள் தலைவர் சாந்தகுமார் தரப்பினர், ‘‘செம்பாக்கம் நகராட்சி பகுதியில் நடைபெறும் அதிமுக கூட்டம் தொடர்பான போஸ்டரில், சாந்தகுமார் பெயரைப் போடாமல் கூட்டம் நடத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்.’’ என எச்சரித்து சென்றனர்.

Related Stories: