திருவாடானை அருகே தண்ணீர் புகுந்ததால் 500 ஏக்கரில் நெற்கதிர் சேதம்

திருவாடானை: திருவாடனை அருகே தண்ணீர் புகுந்ததால் 500 ஏக்கரில் நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகி வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அஞ்சுகோட்டை கிராமத்தில் பெரிய பாசன கண்மாய் உள்ளது. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் இந்த கண்மாய் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இக்கண்மாயின் பாசனத்திற்கு உட்பட்ட நிலங்களில் நெல்மணிகள் விளைச்சலுக்கு வந்துவிட்டன.  இருப்பினும் கண்மாயில் தண்ணீர் அதிகமாக உள்ளது. கண்மாயிலிருந்து வெளியேறும் தண்ணீர்  ஓரிக்கோட்டை, கீழக்கோட்டை, சேந்தனி, பாரதிநகர், செங்கமடை, அழகமடை, சானாவயல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் வயல்களில் புகுந்து வருகின்றன.

இதனால் விளைந்த நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கண்மாய் ஓரளவு பெருகிய போது பாதிப்பு ஏற்படுவதில்லை. அதிக மழை பெய்து முழு கொள்ளளவை எட்டும் போது கண்மாயின் மேற்பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான ஏக்கரில் பாதிப்பு ஏற்படும். அறுவடைக்கு காத்திருந்த 500 ஏக்கரில் தண்ணீர் புகுந்ததால் நெல்மணிகள் அழுகி வீணாகும் அவலம் உள்ளது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது’ என்றனர்.

Related Stories: