பக்தர்களுக்கு ஆபாச லிங்க் அனுப்பிய வழக்கு; திருப்பதி தேவஸ்தான டிவி ஊழியர்கள் டிஸ்மிஸ் நடவடிக்கை சரியானதுதான்: ஆந்திர ஐகோர்ட் அதிரடி

திருமலை: பக்தர்களுக்கு ஆபாச லிங்க் அனுப்பிய விவகாரத்தில் திருப்பதி தேவஸ்தான டிவி ஊழியர்கள் மீதான டிஸ்மிஸ் நடவடிக்கை சரியானதுதான் எனக்கூறி அவர்கள் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இந்து தர்ம பிரசாரம் மற்றும் ஏழுமலையான் கோயிலில் நடைபெறக்கூடிய உற்சவங்களை நேரடி ஒளிபரப்பு செய்வதற்காக வெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சி தமிழ் மற்றும் தெலுங்கில் ஒளிபரப்பாகி வருகிறது. இங்குள்ள ஊழியர்கள் சிலர், ஆபாச படங்களை தொலைக்காட்சி அலுவலகத்தில் உள்ள கணினியில் வைத்து பார்த்ததோடு இந்த வீடியோ லிங்கை பக்தர்களுக்கு இ-மெயில் மூலம் அனுப்பினர்.

இதுகுறித்து பக்தர் ஒருவர் தேவஸ்தான அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதன்பேரில், தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, ஆபாச வீடியோ விவகாரத்தில் 5 ஊழியர்களை டிஸ்மிஸ் செய்து தேவஸ்தானம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட 5 ஊழியர்களும் ஆந்திர ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், ‘எங்களுக்கு எந்தவித நோட்டீசும் முன்கூட்டியே வழங்காமல், விளக்கமும் கேட்காமல் தேவஸ்தான அதிகாரிகள் பணிநீக்கம் செய்துவிட்டனர்’ என தெரிவித்திருந்தனர்.இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி சத்யநாராயணமூர்த்தி, டிவி ஊழியர்களின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் அவர்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ததோடு, அவர்கள் மீது தேவஸ்தான அதிகாரிகள் எடுத்த டிஸ்மிஸ் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.

Related Stories: