புத்தாண்டை வரவேற்க புதுவையில் குவிந்த தமிழக, கர்நாடக மக்கள்; பீச்சில் ஆட்டம் பாட்டம்: போலீஸ் தடியடி

புதுச்சேரி: புதுச்சேரியில் வருடந்தோறும் புத்தாண்டு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். ஓட்டல்கள், ரிசார்ட்களில் டிஸ்கோத்தே நடனத்துடன் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால் இந்தாண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி வழங்குவதில் கவர்னர், முதல்வர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கடைசிநேர சிக்கலை தவிர்க்க ஓட்டல், ரிசார்ட் நிர்வாகங்கள் புத்தாண்டு கொண்டாட்ட கலைநிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டன. தங்குவதற்கு மட்டுமே வெளிமாநிலத்தவரை அனுமதித்தனர்.

தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் புத்தாண்டு நள்ளிரவு கொண்டாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சென்னை, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் குவிந்தனர்.

புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும் கடற்கரை சாலை பல மண்டலமாக பிரிக்கப்பட்டு காவல்துறை பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டது. மதியம் 2 மணி முதல் நகர பகுதியில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டன. நள்ளிரவு புத்தாண்டை வரவேற்க கடற்கரையில் திரண்டவர்களுக்கு வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இலவச பேருந்து சேவை ஏற்படுத்தப்பட்டிருந்தது.

சரியாக 12 மணியளவில் கடற்கரை சாலையில் கூடியிருந்தவர்கள் ஒன்றாக சேர்ந்து புத்தாண்ைட ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இதனால் கடற்கரை சாலை வாழ்த்து மழையில் நனைந்தது. முன்னதாக சீகல்ஸ் உணவகம் எதிரே அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு மண்டலத்தில் மக்கள் கூட்டம் முண்டியக்கவே, தடுப்புகளை மீறி நுழைய முயன்றவர்களை போலீசார் தடுத்தனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கும்பலாக கூடியவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.

புதுச்சேரியில் வருடந்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புத்தாண்டை கொண்டாட திரள்வது வழக்கம். ஆனால் இந்தாண்டு புதிய வகை கொரோனா எச்சரிக்கையால் 10 ஆயிரம்பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: