களக்காடு அருகே டீ மாஸ்டரை கடத்தி நகைகள் பறித்த 5 பேர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

களக்காடு: களக்காடு அருகே டீ மாஸ்டரை கடத்தி சென்று, அரிவாள் முனையில் நகைகளை பறித்த வழக்கில் 5 பேரை தனிப்படைபோலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள காடன்குளம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த நாராயணன் மகன் சிவராமன் (29). இவர், சென்னையில் உள்ள ஓட்டலில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த 8 மாதங்களுக்கு முன் கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தடை உத்தரவு பிறப்பித்ததால் சென்னையில் சிவராமன் வேலை பார்த்த கடை மூடப்பட்டது. இதனால் அவர் சொந்த ஊருக்கு வந்தார்.  3 மாதங்களுக்கு முன்பு அவருக்கு திருமணமானது.

இந்நிலையில் கடந்த மாதம் (நவம்பர்) 27ம்தேதி சிவராமன் மேலசெவலில் நடந்த தனது உறவினர் சங்கரசுப்பு திருமண நிகழ்ச்சிகள் கலந்து கொண்டார். பின்னர் ஊருக்கு செல்வதற்காக மேலசெவல்  பஸ்நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த மேலசடையமான்குளத்தை சேர்ந்த கண்ணன், அவரை தன்னுடன் பைக்கில் வருமாறும் பொன்னாக்குடியில் இறங்கி விடுகிறேன் என்றும் அழைத்தார். கண்ணனை ஏற்கனவே  திருமண நிகழ்ச்சியில் பார்த்திருந்ததால் சிவராமனும் அவருடன் பைக்கில் ஏறி சென்றார். சிறிது தூரம் சென்றதும், அவர்களது பைக்கில் மேலசடையமான்குளத்தை சேர்ந்த அருணும் ஏறிக் கொண்டார்.

சிங்கிகுளம்-வடூவூர்பட்டி ரோட்டில் சென்ற போது திடீர் என கண்ணன் பைக்கை அங்குள்ள மண் ரோட்டில் காட்டுப்பாதையில் திருப்பி ஓட்டி சென்றார். இதுகுறித்து சிவராமன் கேட்ட போது அவர் பதில் ஏதும் கூறாமல்  பைக்கை வேகமாக ஓட்டி சென்றார். அதனைதொடர்ந்து காட்டுப்பகுதியில் உள்ள ஒரு அறை முன்பு பைக்கை நிறுத்தினர். அங்கு மேலசடையமான்குளத்தை சேர்ந்த முருகன் என்ற ரவுடி முருகன், கொம்பையா என்ற  மலை கொம்பன், முன்னீர்பள்ளத்தை சேர்ந்த மணி என்ற வாத்துமணி மற்றும் 3 பேர் அரிவாளுடன் நின்று கொண்டிருந்தனர்.

அவர்கள் அரிவாளை காட்டி மிரட்டி சிவராமன் அணிந்திருந்த தங்க நகைகளை கழற்றி தருமாறு கேட்டனர். அதற்கு அவர் மறுத்தார். இதையடுத்து அவர்கள் சிவராமன் கழுத்தில் அரிவாளை வைத்து கொலை செய்து  விடுவதாக மிரட்டி அவர் அணிந்திருந்த நான்கரை பவுன் எடையுள்ள கைச்செயின், ஒரு பவுன் எடையுள்ள தங்க மோதிரம், 2 கிராம் எடையுள்ள தங்க மோதிரம் மற்றும் செல்போனை பறித்து விட்டு தப்பிச் சென்று  விட்டனர். பறிக்கப்பட்ட தங்கநகைகள் மற்றும் செல்போனின் மதிப்பு ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் ஆகும்.

இதுகுறித்து அவர், களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய நாங்குநேரி டி.எஸ்.பி. லிசா  மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் சிவராமனிடம் தங்கநகைகளை பறித்தது தொடர்பாக மணி என்ற வாத்துமணி (21), சுடலைக்கண் என்ற கண்ணன் (22), அருண் (18), கருத்தப்பாண்டி (30),  முருகன் (30) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: