தங்கச்சுரங்க தொழிலாளர்களுக்கு செட்டில்மென்ட் தொகையை வழங்க வேண்டும்: பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை

தங்கவயல்: தங்கச்சுரங்கம் மூடப்பட்டு 20 ஆண்டுகள் முடியும் நிலையில், இன்னும் வழங்காமல் உள்ள செட்டில்மென்ட் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு  பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சுமார் 120 ஆண்டுகள் பழமையான தங்கச்சுரங்க நிறுவனத்தை மத்தியில் பாஜ தலைமையிலான கூட்டணி ஆட்சி இருந்தபோது 2001 மார்ச் 31ம் தேதி மூடிவிட்டு தொழிலாளர்களை வீதிக்கு கொண்டுவந்தனர். இந்தியாவில் மட்டுமல்ல உலகில் எந்த  தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கும் ஏற்படாத அநியாயம் தங்கச்சுரங்க தொழிலாளர்களுக்கு ஏற்பட்டது. விருப்ப ஓய்வில் வெளியேற்றிய தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச நிவாரணம் கூட வழங்காமல், மிகவும் குறைவான  செட்டில்மெண்ட் செய்து வஞ்சித்து விட்டனர்.

சுரங்க தொழிலாளர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சுகாதாரத்திற்கு உதவியாக இருந்த மருத்துவமனையை மூடி விட்டனர். அதை மீண்டும் திறக்க வேண்டும். சிலிகாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு சிகிச்சை வசதி செய்து கொடுக்க வேண்டும். சுரங்கம் மூடப்பட்டு 20 ஆண்டுகள் முடியும் நிலையில், தொழிலாளர்களுக்கு வழங்காமல் பாக்கி வைத்துள்ள செட்டில்மென்டிற்கு தேவையான  ரூ.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வேலை இழந்துள்ள சுரங்க தொழிலாளர்களுக்கு புதிய பென்ஷன் திட்டம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் மத்திய அரசிடம் வைத்துள்ளதுடன் சம்மந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இது தொடர்பாக  குரல் எழுப்ப வேண்டும் என்று வஞ்சிக்கப்பட்ட தொழிலாளர்களின் வேதனை குரலாக  உள்ளது.

Related Stories: