முதல் டெஸ்ட்: 101 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து

மவுன்ட் மவுங்கானுயி:  பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்டில், நியூசிலாந்து அணி 101 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று தொடரில் முன்னிலை பெற்றது. பே ஓவல் மைதானத்தில் கடந்த 26ம் தேதி தொடங்கி நடந்து வந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீசிது. கேப்டன் வில்லியம்சன் சதம் விளாசி அசத்த, நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 431 ரன் குவித்து ஆல் அவுட்டானது. வில்லியம்சன் 129, டெய்லர் 70, நிகோல்ஸ் 56, வாட்லிங் 73 ரன் எடுத்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் ஷாகீன் அப்ரிடி 4, யாசிர் ஷா 3, அப்பாஸ், அஷ்ரப், நசீம் ஷா தலா  1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 239 ரன்னுக்கு சுருண்டது. கேப்டன் முகமது ரிஸ்வான் 71 ரன், பாஹீம் அஷ்ரப் 91 ரன், அபித் அலி 25 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். நியூசி. தரப்பில் ஜேமிசன் 3, சவுத்தீ, போல்ட், வேக்னர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 192 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய நியூசி. அணி 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன் என்ற ஸ்கோருடன் டிக்ளேர் செய்தது. தொடக்க வீரர்கள் லாதம் 53, பிளண்டெல் 64, வில்லியம்சன் 21 ரன் எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, 373 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 4ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 71 ரன் எடுத்திருந்தது. கடைசி நாளான நேற்று அந்த அணி 271 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அசார் அலி 38, பவாத் ஆலம் 102, முகமது ரிஸ்வான் 60, அஷ்ரப் 19 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர் (3 பேர் டக் அவுட்). நியூசிலாந்து பந்துவீச்சில் சவுத்தீ, போல்ட், ஜேமிசன், வேக்னர், சான்ட்னர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். நியூசி. அணி 101 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. வில்லியம்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். நியூசிலாந்து 1-0 என முன்னிலை வகிக்க, 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிறைஸ்ட்சர்ச்சில் ஜன. 3ம் தேதி தொடங்குகிறது.

Related Stories: