காவிரி-கோதாவரியை இணைத்தே தீருவோம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி

திருச்சி: காவிரி- கோதாவரியை இணைத்ேத தீருவோம் என்று தொட்டியத்தில் நேற்று நடந்த பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் நாமக்கல்லில் பிரசாரத்தை துவக்கினார். நேற்று காலை நாமக்கல்லில் இருந்து திருச்சி வந்த முதல்வருக்கு, மாவட்ட எல்லையான மேய்க்கல்நாய்க்கன்பட்டியில் அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, முன்னாள் அமைச்சர்கள் பரஞ்சோதி, சிவபதி, எம்எல்ஏ செல்வராஜ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர் தொட்டியம் வாணப்பட்டறை மைதானத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பேசியதாவது: கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கொண்டு வந்துள்ளோம். நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். காவிரி- கோதாவரி இணைப்பை நிறைவேற்றியே தீருவோம். இது தொடர்பாக இரு மாநில முதல்வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. எல்லோரும் பயன்பெற வேண்டும் என்பதற்காக பொங்கல் பரிசு 2,500 வழங்கப்பட்டுள்ளது. அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளது.

மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனில் இந்த ஆட்சி முழு கவனம் செலுத்தி வருகிறது. நடப்பாண்டில் 32 லட்சத்து 40 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. உள் ஒதுக்கீடு மூலம் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் வரும் ஆண்டில் கூடுதல் மாணவர்கள் சேர வாய்ப்பு உண்டு. ஜெயலலிதா காட்டிய வழியில் முழு ஆட்சியை நடத்தி வருகிறோம். இந்த ஆட்சி தொடர ஆதரிக்க வேண்டும். அதிமுகவில் கிளை செயலாளர் கூட முதல்வர் ஆக முடியும். இதற்கு நானே உதாரணம். இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து முதல்வர் எடப்பாடி, அருகில் உள்ள பண்ணை வீடு என்ற இடத்தில் வாழை விவசாயிகளை சந்தித்து குறைகளை ேகட்டறிந்தார். அப்போது விவசாயிகள் அளித்த மனுவில், பள்ளி சத்துணவில் உலர் வாழை பழங்கள் வழங்க வேண்டும். தொட்டியத்தில் வாழை ஏற்றுமதி தொழில் மையம் அமைக்க வேண்டும். அதிக சத்துள்ள வாழை சாகுபடிக்கான ஆராய்ச்சி மையம் நிறுவ வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில் உள்ள வாழை தோப்பில் வேலை செய்து கொண்டிருந்த விவசாய தொழிலாளர்களிடம் முதல்வர் குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து சீனிவாசநல்லூர் வந்த எடப்பாடி, அங்கு வேனை விட்டு இறங்கி வீடு வீடாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். துறையூர், மண்ணச்சநல்லூர், நம்பர் 1 டோல்கேட் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்த முதல்வர், இரவு திருச்சியில் தங்கினார்.

Related Stories: