ஆருத்ரா தரிசன விழா: அவிநாசிலிங்கேசுவரர் கோயிலில் 45 வகை திரவியங்களால் அபிஷேகம்...நமசிவாய கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்

அவிநாசி: அவிநாசி லிங்கேசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு 45 வகை திரவியங்களால் நடராஜனுக்கு மகா அபிஷேகம் பக்தர்களின் நமசிவாய கோஷத்துடன் நடந்தது. திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அவிநாசி  லிங்கேசுவரர் கோயில் உள்ளது. தேவார, திருவாசக பாடல் பெற்றதும், கொங்கு ஏழு சிவதலங்களுள் முதன்மை வாய்ந்த சிவஸ்தலமான இங்கு இன்று அதிகாலை ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. அதை முன்னிட்டு அதிகாலை 3 மணி  முதல் 6 மணி வரை நடராஜருக்கு மகாஅபிஷேகம் நடைபெற்றது. இதில், விபூதி, வெண்ணெய்,

அன்னம், சந்தனாதி தைலம், நெல்லிப்பொடி, பாசிப்பயறுமாவு, வில்வப்பொடி, நெல்லிப்பொடி, அரிசிமாவு, திருமஞ்சனம், மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், நெய், தேன், கரும்பு சர்க்கரை, தேங்காய்த்துருவல், மாதுளை, பால், தயிர், கரும்புச்சாறு,  ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, சப்போட்டா, அன்னாசிப்பழம், கொய்யா, விளாம்பழம், எலுமிச்சை, இளநீர், சந்தனம், பன்னீர், சங்காபிஷேகம், சொர்ணாபிஷேகம், ஸ்தாபன கலச புனித தீர்த்தம் உள்ளிட்ட 45 வகை திரவியங்களால் மகா அபிஷேகம்  நடைபெற்றது. பக்தர்கள் ஏராளமானோர் திரண்டு, நமசிவாய கோஷம் எழுப்பினர். பின்னர் நடராஜப்பெருமானுக்கும், சிவகாமியம்மனுக்கும் அந்திமந்தாரை, சம்பங்கி, தாமரை, வேர், ஏலக்காய், வெட்டிவேர், மருகு, மயிற்கண், திராட்சை,  செவ்வந்தி, விருட்சப்பூ ஆகிய அழகிய மணம் மிகுந்த மலர்களைக்கொண்டு சிறப்பு அலங்காரம் நடந்தது.

இதையடுத்து காலை 8 மணிக்கு நாதஸ்வரமேளத்துடன் நடராஜ பெருமானும்,  சிவகாமியம்மனும் பிரகார உலா வந்து பக்தர்களுக்கு  அருள்பாலித்தனர். விழாவை முன்னிட்டு கோயிலில் சிவாச்சாரியார்கள் வேதபாராயணம் செய்து கூட்டு  வழிபாடு நடத்தினர். ஓதுவார்மூர்த்தி சுவாமிகள் திருவாசகம் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி  பாடல்களை பாடினர். தொடர்ந்து ருத்ரபாராயணமும், ருத்ரஜெபமும், மகா தீபாராதனைகளும் கூட்டு வழிபாடுகளும்  நடைபெற்றது.  விழாஏற்பாடுகளை, இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் வெங்கடேஷ், அவிநாசிலிங்கேசுவரர் கோயில் செயல் அலுவலர் லோகநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: