மழைநீர் கசிந்து வருவதால் ஒரத்தநாடு சார்பதிவாளர் அலுவலக மேற்கூரையை பிளாஸ்டிக் ஷீட்டால் மூடி வைத்திருக்கும் அவலம்

ஒரத்தநாடு: மழைநீர் கசிந்து வருவதால் ஒரத்தநாடு சார்பதிவாளர் அலுவலக மேற்கூரையை பிளாஸ்டிக் ஷீட்டால் மூடி வைத்துள்ளனர். இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரத்தநாட்டில் 107 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த சார்பதிவாளர் அலுவலகத்துக்கு ஒரத்தநாடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 56 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பத்திரப்பதிவு, திருமண பதிவு உள்ளிட்ட பல்வேறு பதிவுகளுக்கு தினம்தோறும் வந்து செல்கின்றனர். மேலும் அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகளான நிலையில் போதுமான பராமரிப்பு இல்லாமல் உள்ளது.

அலுவலக கட்டிடத்தின் மேல் பகுதியில் மரம், செடிகள் முளைத்துள்ளதால் சுவர்களில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் அலுவலகத்துக்கு பொதுமக்கள் அச்சத்துடன் தான் வந்து செல்கின்றனர். அலுவலர்களும் அச்சத்துடன் தான் பணியாற்றி வருகின்றனர். மேலும் அலுவலகத்துக்கு வரும் முதியோர், பெண்கள், கர்ப்பிணிகள் வந்தால் அவர்கள் உட்காருவதற்கு கூட இடமில்லை. இதனால் கட்டிடத்தின் ஓரத்தில் உள்ள நிழலில் தான் நிற்கின்றனர். 107 ஆண்டுகள் பழமையான சார்பதிவாளர் அலுவலக கட்டிடம் எப்போது விழுமோ என்ற அச்சம் ஒரு பக்கம், எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் உள்ளதால் வேதனையில் மக்கள் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் அலுவலக கட்டிடத்துக்குள் மழைநீர் ஒழுகியது. இதனால் அலுவலகத்துக்குள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ஆவணங்களை பாதுகாப்பதற்காக கட்டிடத்தின் மேற்கூரையை பிளாஸ்டிக் ஷீட்டால் மூடி வைத்துள்ளனர். இதுபோன்ற அபாய நிலையால் அலுவலர்கள், பொதுமக்கள் வந்து செல்வதற்கே அச்சப்படுகின்றனர். எனவே ஒரத்தநாடு சார்பதிவாளர் அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். கட்டிடத்துக்குள் மழைநீர் கசியாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். அலுவலக வளாகத்தில் மக்களுக்கு அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: