பார்சன்ஸ் வேலி அணையில் இருந்து குடிநீர் விநியோகத்திற்காக மின்கேபிள் அமைக்கும் பணி

*ஆ.ராசா எம்.பி, துவக்கி வைத்தார்

ஊட்டி : ஊட்டி பார்சன்ஸ்வேலி அணையில் இருந்து ஊட்டி நகருக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய ரூ.6.02 கோடி மதிப்பில் பூமிக்கடியில் மின் கேபிள் அமைக்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டு பகுதிகளில் சுமார் 1 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். ஊட்டி நகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பார்சன்ஸ்வேலி அணை இருந்து வருகிறது. இதுதவிர பார்சன்ஸ்வேலி அணை நீர் மின் உற்பத்திக்காகவும் பயன்படுகிறது.

மேலும், வெலிங்டன் ராணுவ மையத்திற்கும் குழாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. ஊட்டி நகராட்சிக்கென பார்சன்ஸ்வேலி அணையில் இருந்து மூன்று குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை சமயங்களில், காற்றுடன் மழை பெய்யும் போது சாலையோரங்கள், குடியிருப்பு அருகேயுள்ள மரங்கள் விழுந்து பாதிப்புகள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

ஊட்டி நகருக்கு குடிநீர் வழங்கும் நீராதாரமான பார்சன்ஸ்வேலி அணை நீரேற்று நிலையத்திற்கு செல்லும் மின் கம்பிகள் மீது மரம் விழுந்து, மின் விநியோகம் தடைப்படும். இது போன்ற சமயங்களில், ஊட்டி நகருக்கு தண்ணீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படும்.

மின் கம்பிகள் மீது விழுந்த மரங்கள் அனைத்தும் முற்றிலும் அகற்றப்பட்ட பின்னரே மின் விநியோகம் சீராகும். இதனால், மழை காலங்களில் பல நாட்கள் குடிநீர் இன்றி ஊட்டி நகர் மக்கள் அவதிப்படும் நிலை தொடர்ந்தது. இதனால், தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யும் பொருட்டு பார்சன்ஸ்வேலி அணை பகுதியில் அமைந்துள்ள நீரேற்று நிலையங்களுக்கு பூமிக்கடியில் மின்கம்பிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

இதற்காக திட்ட மதிப்பீடும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இத்திட்டத்தை செயல்படுத்த முதல்வர் ஒப்புதல் அளித்தார். இந்த பணிக்கு ரூ.6.02 கோடி நிதி ஒதுக்கப்பட்டு தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மூலம் ஊட்டி நகராட்சி குடிநீர் நீரேற்று நிலையத்திற்காக உயர்மின் அழுத்த புதைவடம் (நிலத்தடி மின்கேபிள்கள்) அமைக்கும் திட்டம் துவக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை வகித்தார். அரசு தலைமை கொறடா ராமசந்திரன், ஊட்டி எம்எல்ஏ., கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆ.ராசா எம்.பி பங்கேற்று நிலத்தடி கேபிள் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘பருவமழை சமயங்களில் ஒவ்வொரு ஆண்டும் மின்கம்பங்கள் சாய்ந்து 10 நாட்கள் வரை மின் விநியோகம் தடைபடுவது வாடிக்கையாக இருந்தது. குறிப்பாக பார்சன்ஸ்வேலியில் இருந்து ஊட்டி நகர பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் நிலவியது. கடந்த முறை தமிழக முதல்வர் ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்திற்கு ஆய்விற்கு வந்த போது இதுகுறித்து தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து உயர்மின் கேபிள்களை நிலத்திற்கு அடியில் அமைக்க ஒப்புதல் அளித்து உத்தரவிட்டார்.

2 மாதங்களில் இப்பகுதியில் மின் கம்பங்கள் அகற்றப்பட்டு, மின் கேபிள்கள் நிலத்தடியில் அமைக்கப்படும். இதன் மூலம் ஊட்டி நகர மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க தடையில்லா மின்சாரம் கிடைக்கும்’’ என்றார். இந்நிகழ்வில் நீலகிரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சாந்தநாயகி, செயற்பொறியாளர் சிவக்குமார், ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி,துணை தலைவர் ரவிக்குமார், ஆணையாளர் கணேஷ், திட்ட குழு உறுப்பினர் ஜார்ஜ் மற்றும் மின்வாரிய அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து ெகாண்டனர்.

Related Stories: