*சூரிய உதயத்தை கண்டு மகிழ்ந்தனர்
கன்னியாகுமரி : சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினந்தோறும் வெளி மாவட்டங்கள், மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக வார விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்படும்.இந்த நிலையில் நேற்று வார விடுமுறை நாளையொட்டி அதிகாலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்தனர். அவர்கள் சூரிய உதயத்தை கண்டு பரவசம் அடைந்தனர்.
பெரும்பாலானோர் தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். கன்னியாகுமரியில் நேற்று காலை அதிகளவில் பனியின் தாக்கம் இருந்தபோதிலும் அதனை பொருட்படுத்தாது சுற்றுலா பயணிகள் திரிவேணி சங்கமத்தில் புனிதநீராடிவிட்டு அருகில் உள்ள பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். காலை 8 மணியளவில் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை, கண்ணாடி பாலத்திற்கு செல்வதற்காக படகில் செல்ல டிக்கெட் எடுக்க பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு சென்றனர்.
அங்கு அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுத்தனர். இதற்கிடையே சுற்றுலா பயணிகள் குவிந்ததால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின்பேரில் கன்னியாகுமரி டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
